டெல்லி : சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நட்பு எல்லை மீறி இருப்பதாக ஐரோப்பிய ஆணைய தலைவராக உர்சுலா வான் டெர் லெயன் விமர்சித்துள்ளார். ஐரோப்பிய ஆணைய தலைவராக உர்சுலா வான் டெர் லெயன் பதவி ஏற்ற பின் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார்.டெல்லியில் நடந்த ரைஜினா பேச்சுவார்த்தை 2022 நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உர்சுலா வான் டெர் லெயன், உக்ரைனில் ரஷ்யா நடத்தும் தாக்குதல் இந்தோ – பசிபிக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பு ஆகியவை ஆசிய மற்றும் ஐரோப்பாவில் ஜனநாயகத்திற்கு சவாலாக இருப்பதாக கூறினார். ரஷ்யாவின் தாக்குதல் தோல்வியில் முடிந்து இருப்பதாகவும் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் மட்டும் தனித்துத் தீர்வாக இல்லை என்றும் அவர் கூறினார். ரஷ்யா – சீனா இடையிலான நட்பு எல்லையின்றி வளர்ந்து இருப்பதாகவும் உர்சுலா வான் டெர் லெயன் தெரிவித்தார். முன்னதாக பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். இதில், இந்தியா-ஐரோப்பிய ஆணையம் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம், வர்த்தகம், பருவநிலை, டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் பேசினர்.இந்தியாவில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் அமைப்பது என்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் இந்த கவுன்சில் அமைக்கப்படுகிறது.