செம்பா: “தேடிவந்த தேவதை விழித்துக்கொண்டு காணும் கனவு” | பகுதி 32

சூரியன் வெடித்துக்கிளம்பிய திசையிலிருந்து வெளிச்சம் குருதி போல வானெங்கும் கசிந்தேறிக்கொண்டிருந்தது. அச்சமூட்டுகிற அந்தச் செவ்வானம் அன்றைய விடியல் குயாவுக்கு மிகவும் மோசமான விடியல் தான் என்று கட்டியம் கூறுவது போலிருந்தது.

ஊரின் புறம்பே யிபிகாவின் உடலை அடக்கம் செய்துவிட்டு மாளிகை முன்றலில் கூடி நின்றனர். பன்னிரண்டு குடிகளின் பெருந்தலைகளும் வந்திருந்தனர். மக்கள் கூட்டம் முண்டியடித்தது. கண்கள் கசிய நின்ற அக்கூட்டத்தின் பார்வை மொத்தமும் மாளிகை முன்றலில் தூணில் சாய்ந்திருந்த சுரோவின் மீதே நிலைத்திருந்தது.

உள்ளூர்வாசிகளின் நினைவு தெரிந்த நாள் முதல் சுரோ அழுது யாருமே பார்த்ததில்லை, சிறு வயதில் அவன் அடிபட்ட வலிக்குக் கூட அழுததில்லை. அடடா வலிக்கிறதா என்றால் பரவாயில்லை விடுங்கள் என்று கேட்பவர்க்கு ஆறுதல் சொல்லும் பிள்ளை. இப்போதும் அழவில்லை தான். ஆனால் அணிந்திருந்த வெள்ளுடைக்கு இணையாய் முகத்தின் குருதி மொத்தமும் வடிந்தவன் போல வெளுத்துப்போயிருந்தான். அவன் அப்படி இடிந்து போய் அமர்ந்திருப்பதை காணச்சகியவில்லை. அருகே இஜினாசி ஓசையின்றி அழுதுகொண்டிருந்தான்.

இஜினாசியைப்பொருத்தவரை அவனது சொந்தத்தகப்பனை விடவும் அவனை அதிகம் நேசிக்கத்துவங்கியிருந்தவர் யிபிகா. அவனது போதாமைகளை நன்குணர்ந்தும் அவன் மீது பாசம் காட்டிய மனிதர். அவனைத் தன் வாரிசாகவே உருவாக்கியவர்.

அவர் இத்தனை அவசரமாக அவனை விட்டுப்பிரிவாரென்று அவன் எண்ணியிருக்கவில்லையே! எதிர்பாராதவேளையில் நேர்ந்து போன பேரிழப்பு அவனை வெகுவாக அசைத்திருந்தது. அருகேயிருந்து ஹிம்சான் அவனை ஆற்றுப்படுத்துவதை ஒரு வித அவஸ்தையோடு பார்த்துக்கொண்டிருந்த யூசு மாமன் சுரோவின் அருகே வந்தார்.

“சுரோ! வேலைகள் அதிகமிருக்கின்றன. இப்படி அழுது அரற்றுவதால் ஆகப்போவது ஏதுமில்லையில்லையா?”

“ஆமாம். என்ன செய்யவேண்டும் இப்போது?”

“காரியங்கள் பார்க்கவேண்டும். இனி நீ தானே தலைவன்.”சட்டென அங்கொரு அமைதி நிலவியது. இஜினாசியின் கண்களை நிறைத்திருந்த சோகத்தை வெளித்தள்ளியபடி குரோதம் உள்ளேறியது.

“அதெப்படி?”

“என்ன அதெப்படி? சுரோ தானே மூத்த வாரிசு?” ஜீமின்னின் மூத்த குரலுக்கு ஆதரவாய் ஆமோதிப்புகள் எதிரொலித்தன.

செம்பா

“மூத்தவனென்றால் போதுமா? இன்றைய இந்த நிலைக்குக் காரணமானவனே அவன் தானே?” இஜினாசியின் அருகே நின்று எடுத்துக்கொடுத்தார் ஹிம்சான்.

“என்ன உளறல் இது ஹிம்சான்?” எதற்கும் அசையா ஜீமின்னே கோபம் கொண்டுவிட்டார்.

“உளறல்ல முற்றுமுதலான உண்மை. மூன்று திங்களாக மழையில்லை. கெடுசூழ் நீங்கவேண்டுமென்றால் தலைவர் மகன் மணமுடிக்கவேண்டுமென எவ்வளவு கேட்டும் மனமிறங்கவில்லையல்லவா உங்கள் சுரோ. அது தான் இப்படி ஊரே அழும்படியான கெடுநிலை வந்திருக்கிறது. இந்த சுரோவின் பிடிவாதத்தால் தான் இன்று குயா தலைவனை இழந்து நிற்கிறது.” சாட்டை போல உள்ளத்தில் இறங்கிய அந்தக்குற்றச்சாட்டு சுரோவை நிலைகுலைத்தது. எழுந்து ஒருமுறை சுற்றிப்பார்த்தவன் வேகமாக நடந்தான்.

அங்கிருந்து, அந்தக்குற்றச்சாட்டு இன்னும் சொற்களாய் காற்றில் மிதந்தலையும் அந்த இடத்திலிருந்து முடிந்த அளவு தொலைவாய்ப்போய்விடும் முடிவாய் அவன் நடந்தான். கூட்டத்தில் ஒரு சிலர் முடிவைச்சொல்லச்சொல்லி அவனை நிறுத்தமுயல பெரும்பான்மையினர் சுரோவுக்கு ஆதரவாக அவனை ஆதூரமாகத் தட்டிக்கொடுத்து வழிவிட்டனர்.

”எங்கள் இஜினாசி இதோ மக்கள் துயர் துடைக்கத்தான் மணமுடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சுரோவைப்போல சுயநலவாதியில்லை அவர்.”

“இதென்ன பைத்தியக்காரத்தனம். இதையெல்லாம் இன்னுமா நம்புகிறீர்கள்.”

“அடேய்! பார்த்துப்பேசு, முன்னோர் நம்பிக்கையைப்பழிக்காதே நாசமாய்ப்போவாய்.”

“சுரோ எங்கே போகிறார்? என்ன தான் பதிலிதற்கு?”

“பதில் தானே எல்லாம் இன்னும் இரு தினங்களில் உங்களுக்கு விளங்கக்கிடைக்கும். இப்போது அவர்கள் துக்கம் கொள்ள அவகாசம் கொடுங்கள். தயவு செய்யுங்கள்” யூசு கையெடுத்துக்கும்பிட்டார் கூட்டத்தின் முன்னே.

“யூசு சொல்வது தான் சரி. எல்லோரும் கிளம்புங்கள். ஆகவேண்டியதைக் கொஞ்சம் ஆறவிட்டுப்பார்க்கலாம்.” ஜீமின் குரல் கொடுத்தார்.

“ஆமாமாம். வாருங்கள் போகலாம்.”

“அவன் பிறக்கும்போதே கெடுகுறி காட்டியது அதையெல்லாம் மறக்கக்கூடாது. சுரோ குயாவுக்கு எந்த வகையிலும் நன்மை செய்பவனாக இருக்கமாட்டானென்றே தோன்றுகிறது.” ஹிம்சானின் புன்னகை வழிகாட்ட கூட்டத்தில் எவனோ துவங்கினான்.

“சொன்ன நாக்கை வெட்டுகிறேன் பார். சென்ற ஆண்டு மேற்திசை குடிகள் இணைந்து சமருக்கு வந்தபோது எதிர்த்து வென்றவன் யாரென்ற நினைவிருக்கிறதா?” ஊர் சேர்ந்து பதில்கொடுத்தது.

“ஏன் எங்கள் இஜினாசி கூடத்தான் சமருக்குச்சென்றார்!”

“போர்ப்படைத் தலைவன் யார்? சுரோ தானே? அன்று வென்று வந்த வேகம் பற்றியும் சுரோவின் தந்திரங்கள் பற்றியும் ஒரு திங்களாய்ப்பேசிய வாய்களை இப்போது வைக்கோல் அடைத்துக்கொண்டதா என்ன?”

”இதோ பாருங்கள்! உங்கள் சண்டைகளையெல்லாம் இன்னுமிரு நாட்கள் ஒத்தி வையுங்கள். இப்போது தலைவர் குடும்பத்துக்கு உரிய தனிமையைத் தாருங்கள். கிளம்புங்கள்.”

மெல்ல அலமலந்தபடியே ஊர் கலைந்தது. ஒரு வெறித்த பார்வையை உதிர்த்துவிட்டு யூசுவும் உடல்நிலை குன்றியியிருந்த தங்கையைப் பார்க்க உள்ளே போய்விட்டார். பெருந்தலைகளையும் கிளம்பிவிட ஹிம்சானும் இஜினாசியும் மட்டும் முன்றலில் நின்றனர்.

தொலைவில் சோர்வாய் நடந்துப்போய்க்கொண்டிருந்த உருவத்தின் மீது பார்வை படிய யோசனையோடு நின்றிருந்தான் இஜினாசி.

சுரோ ஒரு சொல் பேசவில்லை. பொறுப்பு எனதென்றோ நீ என் தந்தையின் மகனல்ல என்றோ இன்னும் அதிகமான சுடுசொல் ஏதாவது? ம்ஹ்ம்ம்..ஒன்றும் சொல்லவில்லை. எழுந்து நடக்கும்போது அவன் இஜினாசியைப்பார்த்த பார்வையில் இத்தனை நாள் இஜினாசி அவன் மீது வளர்த்தெடுத்த குரோதத்துக்குப் பதில் போல கோபமோ வெறுப்போ துளியுமில்லை. அங்கே இருந்ததெல்லாம் மிதமிஞ்சிய சோகமும் அத்தோடு….அத்தோடு…

செம்பா

“இஜினாசி…மக்களை சுரோவுக்கு எதிராக திருப்புவது என் வேலை, நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். நாளை நீங்கள் தான்..”

ஹிம்சானின் குரல் எங்கோ தூரத்தில் ஒலிப்பது போலிருந்தது. சுரோவின் உருவம் கண்களுக்குள் பேரளவில் விரிந்தது.

அவன் கண்களில் மிதமிஞ்சிய சோகம்…அத்தோடு…இனி நாமிருவர் தானடா என்று சொல்வது போன்ற ஒரு பார்வை.

”சுரோவை எப்படியாவது..”

“சம்சொன்..”

“சொல்லுங்கள் தலைவரே!”

“ஹியோங்..வந்து… சுரோவை சற்றுத் தனித்திருக்கவிடுங்கள். இப்போதைக்கு ஏதும் செய்யவேண்டாம். அவன்…துக்கம் தணியட்டும்” வேறு ஏதும் பேசாமல் உள்ளே நடந்தான் இஜினாசி.

ஹிம்சான் அசைவற்று நிற்க அருகே நெருங்கினார் இல்சங். “என்ன ஹிம்சான் இஜினாசியின் போக்கு சரியில்லையே. அத்தனை சிரமப்பட்டு உள்ளேற்றிய எண்ணம் மொத்தமாய் மாறிவிடும் போலிருக்கிறதே! வெகுநாட்களாக சுரோவை அவன் ஹியோங் என்று அழைக்கவில்லை. இப்போது திடீரென்று..” சட்டெனத்திரும்பி ஹிம்சான் முறைக்கவும் வாயை மூடிக்கொண்டார்.

“ஹியோங் என்று அழைக்கிறானா?… அந்த ஹியோங் இருந்தால் தானே அழைக்க முடியும்?” மெல்லத்திரும்பிப் புன்னகைத்த ஹிம்சானைப்பார்த்து ஒரு நொடி அரண்ட இல்சங் பின் மெல்ல அந்தப்புன்னகையைப் பிரதிபலிக்கலானார்.

“புரிகிறது. ஏற்பாடுகளைச்செய்துவிடலாம்.”

—-

செவ்வரியோடிய வானம் கொற்கை வானிலிருந்து சிறிதும் வேறுபட்டிருக்கவில்லை.

கொன்றைமலர்களின் சிரிப்போ அலகுப்பனைகளின் தலையசைப்போ காணாத புதிய நிலம். முதல் முறையாக நிலமெங்கும் இளஞ்சிவப்பு மலர்கள் அசைந்தாடும் அழகைக் காண்கிறாள். மனதைக்கொள்ளை கொள்ளும் அழகு. இவ்விடத்தின் நீரின் குளிர்ச்சியும் சுவையும் கூட அலாதியாக இருந்தன.

என்னவோ இந்த நிலத்தில் இருக்கிறது!

“என்ன செம்பா அதிகாலையிலேயேக் கனவா? அதுவும் விழித்துக்கொண்டே?” சிரித்தபடி வந்த எழினி மெலிந்திருந்தாள். கருத்தும் போயிருந்தாள். அவளுக்கு கடல் ஒவ்வவில்லை. போதாக்குறைக்கு அந்தப்புயல். அப்பப்பா! இனி உயிர் வாழ்வதே அரிதென்று எல்லோரும் ஓய்ந்து போயிருந்தபோது கால்வைத்த பூமி இது. அதனால் அவளுக்குமே இந்த நிலத்தின் மீது ஒரு பிடிப்பு உருவாகியிருந்தது.

“விழித்துக்கொண்டு காணும் கனவுகளின் வீரியம் அதிகம் எழினி.”

“அப்படியா? அப்படி என்ன தான் கனவு அது? பொறு..பொறு..முன்பொரு நாள் கடலில் கண்டாயே ஒரு கனவு..அதன் நீட்சியா?” எழினியின் கண்களில் மின்னல் வெட்டியது. அதைக் காணாதவள் போல “ எதைச் சொல்கிறாய்?” என்றாள் செம்பா.

“ஆமாமாம்..மறந்து போயிருக்கும் இல்லையா!”

“ஏய்… அது ஏதோ காய்ச்சல் வேகத்தில் உளறியிருக்கிறேன் அதை இன்னும் பிடித்துக்கொண்டு தொங்கி என் உயிரை எடுக்கிறாயே!”

“காய்ச்சலில் அவ்வளவு தெளிவாகக் கனவு வருமா என்ன? மன்னவன் வந்தானா? மையல் கொண்டானா?”

“ஒருநாள் இல்லை ஒருநாள் உன்னைக்கொன்று கடலில் வீசப்போகிறேன் பார்.”

“அடிப்பாவி, என்ன ஒரு கொடூர உள்ளம் உனக்கு? என்னைக் கடலில் வீசுவது இருக்கட்டும். கடலில் நீ பிடித்த முத்து..அது மீண்டும் வந்ததா? கனவில் தான் கேட்கிறேன். அதெப்படி உனக்கு மட்டும் அவ்வளவு உண்மை போல கனவு வரும்?”

“ஆரம்பித்துவிட்டாயா? யாரையும் நிம்மதியாகவே இருக்கவிட மாட்டாயா நீ?” கூடை நிறைய அப்போது தான் பிடித்த மீனோடு உள்ளே வந்த சங்கனின் குரலில் இருந்த எரிச்சல் முகத்தில் இல்லை. அண்ணனின் முகத்தில் நிலவிய பேரமைதி செம்பவளத்தின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

அவர்கள் போவின் நிலத்துக்கு அருகே இருந்த சிறு தீவுகளுள் ஒன்றில் கரையிறங்கி இரண்டு நாட்களாகியிருந்தன. அதிகம் மக்கள் வாழாத பகுதி அது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு கலத்தில் ஏற்பட்டிருந்த சிறு சேதங்களைச் சீர்செய்துகொண்டு விரைவில் குயாவின் கரை நோக்கிக் கலத்தைச்செலுத்துவதாகத்தான் திட்டம். அவர்களை விட்ட கையோடு சில உதவிகளைச்செய்துவிட்டு போவும் கண்ணனும் ஊர் நிலவரம் அறிந்துவரப் போயிருந்தனர்.

செம்பா

குயாவின் கரையைப்பார்த்தபடி குறுநிலப்பரப்பொன்றிலிருந்து சிறுகுன்றில் கூடாரம் ஒன்றைச்செய்து அதில் தான் தங்கியிருந்தது செம்பவளத்தின் கூட்டம்.

கூட்டமென்றால் உண்மையிலேயே ஒரு அரசியின் பயணத்தில் உடன்வரும் அணுக்கப்படையினர் போலக் கூட்டம். கொற்கையிலிருந்து கிளம்பும்போது இருந்த முப்பது பேரில் எஞ்சியவர்களும் இடைவழியில் உடன் இணைந்தவர்களுமாக இப்போது செம்பவளத்தின் பின்னே இருபது பேர் இருந்தனர். அதில் மாலுமிகளும் உரமான வீரர்களும் அடக்கம். போலவே பொன்னும் பொருளும் பாண்டிநாட்டு நல்முத்துகளுமென அவள் கொண்டு வந்த பொருட்களில் சிலபொதிகள் புயலில் தொலைந்திருந்தாலும் எஞ்சியவையே அவளை நெடுநாள் செல்வச்செழிப்போடு இருக்கச்செய்யும். மொத்தத்தில் தனியாய்ப் பயணப்பட்டுக் கரையிறங்கியிருந்த ஒரு இளவரசியாகத் தான் தெரிந்தாள் அந்தப்பகுதிக்கு எப்போதாவது வந்துபோன மீனவர்களுக்கு.

”சொல் செம்பா கனவில் வந்தது அந்த இளவரசன் தானே? வடியாப்புன்னகை என்று சொன்னாயே? அவன் தானே வந்தான்?”

“என்ன இளவரசன்? எங்கே வந்தான்?” கலவரமாய்க்கேட்ட சங்கனைப்பார்த்துச் சிரித்தார்கள் பெண்கள்.

“கனவில் தான் சங்கா. அன்று ஜுர வேகத்தில் ஏதோ சொல்லப்போய்…”

“ஏய் நடிக்காதே! காய்ச்சல் தீர்ந்தபின்னும் அவ்வப்போது கனவில் வந்தவன் கண்ணில் தெரிவதாகச்சொன்னாயே என்னிடம்.”

“உன்னை வைத்துக்கொண்டு ஒரு இரகசியம் பேசமுடியாது.”

“கவலைப்படாதே செம்பா. கடல் தாண்டி இவ்வளவு தூரம் வந்துவிட்ட நம்மால் கனவில் வந்த உன் இளவரசனைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன? கண்டுபிடிப்போம்.” சங்கனும் சேர்ந்துகொண்டான்.

“சும்மா இரு சங்கா! அதுவா முக்கியம்? பயணத்தின் அடுத்தகட்டம் பற்றி சிந்திக்க வேண்டாமா?”

“நீயே சொல். என்ன செய்யலாம்?” அருகே வந்து அமர்ந்து அவன் கேட்கவும் அவளிடம் பதிலில்லை. ஒவ்வொருமுறையும் திசையோ நிலமோ பேர்சொல்லிக் கிளம்பியவளுக்கு ஏனோ இந்த நிலத்திலிருந்து கிளம்ப மனம்வரவில்லை.

“முதலில் போ சொன்னபடி அவனது ஊருக்கு, குயா தலைநகருக்குப்போய் பார்க்கலாம் சங்கா. அப்படி என்ன தான் நம்மைப்போல இருக்கிறார்கள் என்று. அதன்பிறகு அடுத்த கட்டம் சிந்திக்கலாம். ஆனால் அதற்கு முதலில் கலம் சரியாக வேண்டுமே! அது எப்போது முடியும்?”

“வேலை நடக்கிறது செம்பா. இன்னும் ஓரிரு தினங்களில் முடிந்துவிடும்.”

“இளவரசி..இளவரசி” (நெடுஞ்செழியன் அனுப்பிய அணுக்கச்சேவககர்கள் செம்பவளம் எவ்வளவு மறுத்தும் அவளை இளவரசி என்றே விளித்தனர். அவர்களைப்பொருத்தவரை அவள் பாண்டிய இளவரசி தான்.)

“என்ன வீரா? எதற்கிந்தப் பதற்றம்?”

“கரையிலே பிணம்..”

“என்ன?”

“ஐயோ! வாருங்கள். சிறு வயதாய்த் தெரிகிறது.” அரக்கப்பரக்க அனைவரும் ஓடினர். ஆளரவமற்ற அந்த கடற்கரை மணலில் கைகளைப்பரக்க விரித்துக்கிடந்தான் அவன். தலையில் பெருங்காயம் ஏற்பட்டிருக்கவேண்டும். நெற்றியிலிருந்து காது வரை காயம் கருத்துத் தெரிந்தது. உடலிலும் பல இடங்களில் காயம்.

பார்வையால் காயங்களை அலசிக்கொண்டே முகத்தை உற்றுப்பார்த்தவள் அதிர்ந்தாள்.

அவன் தான்…

சங்கன் அதற்குள் அருகே சென்றிருந்தான்.

“முட்டாள்! பிணமென்று சொன்னாயே!..உயிரோடு தான் இருக்கிறான்.” கன்னத்தைத் தட்டி அவனை எழுப்பும் முயற்சியும் உடலிலிருந்து நீரிறக்க செய்த முயற்சிகளையும் பார்த்துக்கொண்டு..கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றாள் செம்பவளம்.

காய்ச்சல் வேகத்தில் கனவில் அவள் கண்ட அதே இளைஞன்!

அவனும் கண்களைத் திறந்தான்.

வெகுசிரமப்பட்டு விழிவிரித்துப்பார்த்த சுரோவின் முதல் பார்வையில் அவள்…கனவில் அவனைத்தேடி வந்த தேவதை. எண்ணியது போலவே. அவன் கனவில் வந்தது போலவே…

”என் ராணி! வந்துவிட்டாயா?” மெல்ல முனகியபடி மீண்டும் ஆயாசத்தோடு கண்களை மூடிக்கொண்டான் சுரோ.

தொடரும்…..

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.