ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு கோசங்கள் மூலம் ஜனாதிபதியையோ பிரதமரையோ பதவியில் இருந்து நீக்க முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பேராசிரியர் நாலக்க கொடஹேவா தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
1993 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவிற்கு பதிலாக, டி.பி.விஜயதுங்க இடைக்கால நிர்வாகத்திற்காக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தீர ,ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இந் நிலையில் இடைக்காக நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக முடியாதா? என்று ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில் இதற்கென ஜனநாயக சட்ட யாப்பு நடைமுறை உண்டு, அதன்படியே செயற்பட வேண்டும். இவர்கள் பதவி விலகினால் நாட்டை கொண்டு நடத்துவது யார்?
பாராளுமன்றமே இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயக சட்ட யாப்பு நடைமுறையிலேயே 1993 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவிற்குப் பின்னர் டி.பி.விஜயதுங்க இடைக்கால நிர்வாகத்திற்காக ஜனாதிபதியாக தெரிவானார் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சமகால அரசாங்கத்திற்கு தற்பொழுது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உண்டு. பெரும்பான்மை இல்லை என்று எவரும் கூறுவார்களாயின் அதனை பாராளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பேராசிரியர் நாலக்க கொடஹேவா மேலும் தெரிவித்தார்.