குவாஹாட்டி: குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி. சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான இவர், அடுத்த தேர்தலில் காங் கிரஸ் சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜிக்னேஷ் மேவானி அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். இக்கருத்து சமூகத்தின் ஒரு பிரிவினரை வன்முறைக்கு தூண்டுவதாக உள்ளது என அசாமின் கோக்ரஜார் மாவட்ட பாஜக தலை
வர் அரூப் குமார் டே புகார் அளித்தார்.
இதன் பேரில் கடந்த வியாழக்கிழமை ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டு அசாம் கொண்டு செல்லப்பட்டார். 3 நாள் போலீஸ் காவலுக்குப் பிறகு கோக்ரஜார் நீதிமன்றத்தில் ஜிக்னேஷ் மேவானி ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது போலீஸ் காவலை நீட்டிக்க மறுத்த நீதிபதி, ஜிக்னேஷ் மேவானியை ஒரு நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.
இந்நிலையில் ஜிக்னேஷ் மேவானிக்கு கோக்ரஜார் நீதிமன்றம் நேற்று காலை ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து புதிய வழக்கில் ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீஸார் கைது செய்தனர். அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யவிடாமல் தடுத்தது மற்றும் அவர்களை தாக்கியதாக ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.