சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான விவாதத்தின்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்குதல் மதுவிலக்கு மற்றும் ஆத்தீர்வை ஆணையர் அலுவலகத்தினை மேம்படுத்தி நவீனமயமாக்குதல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். அவர் வெளியிட்ட 6 முக்கிய அறிவிப்புகள்:
> கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்குதல்.
> மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளுதல்.
> மதுவிலக்கு மற்றும் ஆத்தீர்வை ஆணையர் அலுவலகத்தினை மேம்படுத்தி நவீனமயமாக்குதல்.
> மதுவிலக்கு குற்றவாளிகளின் இரவு நேர சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு 20 சோதனைச் சாவடிகளில் மின்கலத்துடன் கூடிய சூரிய மின் சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் கருவிகளைப் பொருத்துதல்.
> தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லறை விற்பனைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குதல்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) 6,715 மேற்பார்வையாளர்கள் 15,000 விற்பனையாளர்கள் மற்றும் 3,090 உதவி விற்பனையாளர்கள், ஆக மொத்தம் 24,805 சில்லறை விற்பனைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். மேற்குறிப்பிட்டுள்ள பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 ஏப்ரல் 2022 முதல் உயர்த்தி வழங்கப்படும். இதற்கென ஆண்டொன்றுக்கு ரூ.16.67 கோடி கூடுதல் செலவாகும்.
> போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளுதல்.