சென்னை: டெல்டா மாவட்டங்களில் 4 நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் காலை நடைபெற்ற கேள்வி நேரத்தில் திமுக திருவிடைமருதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கோவி செழியன், ‘‘எனது தொகுதியில்16 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நவீன அரிசி ஆலை அமைக்கப்படுமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ‘‘150 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நவீன அரிசி ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.