புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,541 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4,30,60,086 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 16,522 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 24 பேர், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசத்தில் தலா 2 பேரும், டெல்லி மற்றும் மிசோரமில் தலா ஒருவர் என மொத்தம் 30 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 187.71 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இரண்டு நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 6 மடங்கு அதிகரித்துள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் 144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனா நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகின்றார். இதேபோல், பிரதமர் அலுவலவக மூத்த அதிகாரிகள், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடனும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.