சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கும், கட்டுப்பாடுகளை தீவிர படுத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை ஐஐடியில் தொடர்ந்து நோய் கட்டுப்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. ஐஐடியில் நேற்று 79 ஆக இருந்த கொரோனா எண்ணிக்கை மேலும் 32 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ஐஐடியில் மொத்தமுள்ள 7,490 மாணவர்களில் 3,080 பேருக்கு தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 3,080 பேரில் 111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் 109 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
27 மாவட்டங்களில் தொற்று இல்லை. 9 மாவட்டங்களில் ஆங்காங்கே பரவல் உள்ளது. 1 கோடியே 48 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. உடனடியாக மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் கவலைப்பட வேண்டிய கட்டம் இல்லை. அக்கறை காட்ட வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். தர்மபூரி, ராணிப்பேட்டை, மதுரை, திருப்பத்தூர், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக உள்ளது.
தமிழ்நாட்டில் 1,000 பேரில் 3 பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகிறது என்றும் கடந்த 2020 மார்ச் மாதத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பல்வேறு அனுபவங்கள் கிடைத்துள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டும்தான் தற்போது இதற்கான தீர்வு என்பது வல்லுநர்கள் கருத்தாக உள்ளது.
ஊரடங்கு அமல்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கான சூழ்நிலை தற்போது தமிழ்நாட்டில் இல்லை. ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறினார்.
மருத்துவமனைகளில் மின்வெட்டு பிரச்சினை இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது” என்றார்.