சென்னை: கடந்த 2021 ஏப்.1 முதல் 2022 மார்ச் 31 வரை, பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கான சிறப்பு நடமாடும் கண்காணிப்புக் குழுவால் 197 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விதி மீறல்கள் காணப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றங்களால் ரூ.2,65,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு பதிலளித்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சி.வி.கணேசன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்:
பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கான சிறப்பு நடமாடும் கண்காணிப்புக் குழு
பட்டாசு தொழிற்சாலைகள் அபாயகரமானவை மட்டுமின்றி அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டவையாகும். விருதுநகர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், அத்தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கூடுதல் முனைப்புடன் நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பான பணி நிலைமைகளை உறுதி செய்யும் வகையில் அத்தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநர் தலைமையில், பிரத்யேகமாக ஒரு நடமாடும் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குழு, தொழிலாளர்களது பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்வதோடு அங்குள்ள தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு பாதுகாப்புடன் பணிபுரியும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கிறது.
நடமாடும் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்ட பின்னர், பட்டாசு தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்கள், பாதுகாப்பு விதிமுறைகளை நன்கு அறிந்துள்ளனர்.
01.04.2021 முதல் 31.03.2022 உடன் முடிவடைந்த காலத்தில், இக்குழுவால் 197 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விதி மீறல்கள் காணப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றங்களால் ரூ.2,65,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
பட்டாசுத் தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துகளை குறைக்கும் பொருட்டு அத்தொழிற்சாலைகளில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு வழிமுறைகளை காலமுறைதோறும் திறனாய்வு செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஒரு பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.