சென்னை: தமிழக ஆளுநருக்கு எதிராக வரும் 28ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்அழகிரி அறிவிப்பு வெளியிட்டள்ளார். அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் தமிழகத்துக்கு விரோதமாக செயல்பட்டார். அவரைப் பின்பற்றி தற்போதைய ஆளுநர் ஆர்என் ரவியும் தமிழகத்திற்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறார். இதனால், தமிழக மக்களிடையே ஆளுநர்கள் மீது கொந்தளிப்பான எதிர்ப்பு நிலை ஏற்பட்டு வருகிறது. மயிலாடுதுறை சுற்றுப்பயணத்தின் போது மக்கள் தன்னெழுச்சியாக கருப்பு கொடி காட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தது இதன் நீட்சியே.
தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான வாய்ப்புகளைச் சீர்குலைக்கும் நீட் தேர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகு, திமுக தலைமையிலான தமிழக அரசு மறுபடியும் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.
அரசமைப்புச் சட்டப்படி இச்சூழலில், அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்புவதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. ஆனால், ஆளுநர் கடந்த 80 நாட்களாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அதை முடக்கி வைத்திருக்கிறார். தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு ஆளுநர் துணை போகிறார். இது குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும், நீட் மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதில் மத்திய அரசின் ஆதரவோடு தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
இத்தகைய தமிழக விரோதப் போக்கை தமிழக பாஜகவும் ஆதரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாட்டை ஊட்டியில் நடத்தியிருக்கிறார். இதில், பல்கலைக்கழகங்களின் இணை வேந்தராக இருக்கும் உயர் கல்வித்துறை அமைச்சருக்கோ, அத்துறையின் செயலாளருக்கோ அழைப்பு விடுக்காமல், தன்னிச்சையாக ஆளுநர் செயல்படுவது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். இத்தகைய போக்கு நீடித்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு சுதந்திரமாகச் செயல்பட முடியாது.
தமிழக ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை முற்றிலும் உணர்ந்த முதல்வர், தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார். தமிழக முதல்வரின் துணிவு மிக்க இந்த நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் மனதார வரவேற்கிறது, பாராட்டுகிறது.
தமிழகத்தில் இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், தமிழகத்திலுள்ள 13 பல்கலைக் கழகங்களில் வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வர் பெறுவதோடு, அவரே வேந்தராக இருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆனால், தற்போது ஆளுநரே வேந்தராக நீடிப்பதால் துணை வேந்தர்கள் நியமனத்தில் பலவிதமான குளறுபடிகள் ஏற்படுகின்றன. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டதில் எத்தகைய முறைகேடுகள் நடைபெற்றன என்பதை அனைவரும் அறிவார்கள்.
மத்திய- மாநில அரசுகளின் உறவுகள் குறித்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2007-ல் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மதன்மோகன் பூஞ்சி தலைமையில் நால்வர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு 2010ல் சில பரிந்துரைகளைச் செய்தது. அதில், ‘ஆளுநரின் அதிகாரங்களும், மத்திய – மாநில அரசுகளின் உறவுகளும்’ என்ற தலைப்பில் விரிவாக ஆராய்ந்து பல்கலைக் கழகங்களில் வேந்தர்களாக ஆளுநர் நீடிப்பதன் மூலம் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. இத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் தமது விருப்புரிமையின் அடிப்படையில் துணை வேந்தர்களை நியமனம் செய்வதால் மாநில அரசோடு மோதல் ஏற்படுகிற சூழல் உருவாகிறது.
அரசமைப்பு சட்டவிதி 163(1)-ன் கீழ் அமைச்சரவையின் அறிவுரை மற்றும் ஆலோசனையின்படி செயல்பட வேண்டிய ஆளுநர், துணை வேந்தர்கள் நியமனத்தில் அமைச்சரவையின் பரிந்துரையைப் புறக்கணிக்கிற வகையில் செயல்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று பூஞ்சி குழு தெளிவாகக் கூறியிருந்தது. இந்த அடிப்படையில் தான் பல மாநிலங்களில் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
2011ல் குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது, இதே பூஞ்ச் குழு பரிந்துரையின்படி, பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஆளுநர் வேந்தராக நீடிக்க முடியாத நிலையை உருவாக்கினார். இதை தமிழக பாஜக அறியாமல் தமிழக மசோதாவை எதிர்ப்பது விந்தையாக இருக்கிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை முன்மாதிரியாகப் பின்பற்றி, தமிழக முதல்வரே வேந்தராக செயல்பட சட்ட திருத்த மசோதா கொண்டு வந்திருப்பது தமிழக கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை நிச்சயம் உருவாக்கும்.
தமிழக நலன்களுக்கு விரோதமாக நீட் உள்ளிட்ட 13 மசோதாக்களை கிடப்பில் போட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக எதேச்சதிகார முறையில் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்ற வகையில், வருகிற ஏப்ரல் 28ம் தேதி வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜிவ்காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறும்.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் முன்னிலையில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸின் முன்னணித் தலைவர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்கிற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமாக அமைய இருக்கிறது. இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்பதோடு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழக ஆளுநருக்கு உணர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறி உள்ளார்.