Three Tamilnadu Agri products apply for GI tag: தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் தூயமல்லி அரிசிக்கும், மேலப்புளியங்குடி விவசாயிகள் சங்கம் புளியங்குடி எலுமிச்சைக்கும் மற்றும் விருதுநகர் மிளகாய் வியாபாரிகள் சங்கம் விருதுநகர் சம்பா வற்றலுக்கும் (மிளகாய்) புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்துள்ளன.
தமிழகத்தில் 230க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நாட்டு ரகங்களில் தூயமல்லி அரிசியானது தனித்த மல்லிகை நிறத்திலும், இதன் நீராகாரத்தின் (சோறு வடித்த நீர்) சுவை இளநீரையும் ஒத்திருக்கிறது. இந்த அரிசி, நரம்பு வலிமையை அதிகரிக்கப் பயன்படுகிறது. இவ்வாறான சிறப்புப் பண்புகளைக் கொண்டுள்ள இந்த அரிசி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: ஸ்டாலினுடன் நடிகர் விவேக் மனைவி சந்திப்பு: சாலைக்கு விவேக் பெயர் சூட்ட வேண்டுகோள்
தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி கிராமம் எலுமிச்சை சாகுபடிக்கு பெயர் பெற்றது. புளியங்குடியானது, தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு விளையும் எலுமிச்சைகள் டைட்ரேட்டபிள் அமிலத்தன்மையுடன் அதிக புளிப்பு சுவையுடையவை. ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின்படி, புளியங்குடி எலுமிச்சையின் வரலாற்று தோற்றம் குறைந்தது 1940 க்கு முந்தையது.
விருதுநகர் சம்பா மிளகாய் என்பது உள்ளூர் சாகுபடி பயிராகும். இந்த சம்பா மிளகாய் உள்ளூர் வேளாண்-காலநிலை நிலைமைகளுக்கு ஏற்றவாறு வளரும் தாவர இனமாகும், அவை பாரம்பரிய விவசாயிகளால் அவர்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உள்நாட்டில் பெயரிடப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
தமிழக அரசின் புவியியல் அடையாளப் பதிவுப் பொருட்களின் அரசு வழக்கறிஞரும் நோடல் அதிகாரியுமான பி சஞ்சய் காந்தி, இந்த மூன்று விவசாயப் பொருட்களுக்கான விண்ணப்பங்களை புவிசார் பதிவேட்டில் தாக்கல் செய்துள்ளார். சஞ்சய் காந்தி அறிவுசார் சொத்துரிமைகளில் நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் தமிழ்நாட்டில் 15க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு பெறுவதில் முக்கிய பங்கு வகித்தார்.