திருவண்ணாமலையில் நடந்த கள ஆய்வில் பல்லவர் காலத்துச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அணிகலன்கள் மற்றும் சிற்ப அமைதியை வைத்து இச்சிற்பம் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்துக் கொற்றவையாக இருக்கலாம். பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாகத் தவ்வையும் அதன் அருகே வயல்வெளியில் சிவலிங்கமும் முருகர் சிற்பமும் காணப்படுகின்றன.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம், மேல்மலையனூர்ப் பகுதியில் உள்ள ஊர்களில் கள ஆய்வு மேற்கொண்டபோது, கிழவம்பூண்டி கிராமத்தில் உள்ள மல்லியம்மன் கோயியில் ஆய்வு மேற்கொண்டார்.
அவ்வூரின் வடக்கு எல்லையில் பெரிய பாறையின் கீழ் அமைந்துள்ள இக்கோவிலைச் சமீபத்தில் சீரமைத்துப் புனரமைப்பு செய்து சிறப்பாக வழிபாடு செய்துவருவதாக அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். சுமார் 5 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பலகைக் கல்லில் மல்லியம்மன் என்ற பெயரில் உள்ள மூலவர் சிற்பம் எட்டுக் கரங்களுடன் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறது.
தலையைக் கரண்ட மகுடம் அலங்கரிக்க, வட்ட முகத்தில், இருகாதுகளிலும் மகரக் குண்டலமும், கழுத்தில் புலிப் பல் தாலியும், மார்புக் கச்சையும் அணிந்து அனைத்துத் தோள் மற்றும் கைகளிலும் வளைகள் அணிந்து இடை ஆடை தொடைவரை நீண்டு காட்சி தருகிறது.
தனது மேல் வலக்கரத்தில் பிரயோக சக்கரமும், மற்ற வலக் கரங்களில் வாள், மான் கொம்பு, மணி ஆகியவற்றை ஏந்தியபடி உள்ளது. மேல் இடக்கரம் சங்கு தாங்கியும் முறையே மற்ற கரங்கள் வில், கேடயமும் ஏந்தி, கீழ் இடக்கரம் இடையின் மீது ஊரு முத்திரையிலும் காட்சி தருகிறது.
தனது கால்களில் சிலம்பு அணிந்து எருமைத் தலையின் மீது நின்றவாறு காட்சி தரும் இக்கொற்றவையின் வலப்புறம் நவகண்டம் தரும் நிலையிலும், இடப்புறம் வணங்கிய நிலையில் வீரர்களும், கலைமானும் காட்டப்பட்டுள்ளன. இச்சிற்பத்தில் தலைமீது குடை காட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
அணிகலன்கள் மற்றும் சிற்ப அமைதியை வைத்து இச்சிற்பம் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்துக் கொற்றவையாகக் கருதலாம்.
மேலும், இவ்வூரை அடுத்து உள்ள மேல்நெமிலியில் அம்மச்சார் அம்மன் கோயிலில் பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாகத் தவ்வையும் அதன் அருகே வயல்வெளியில் சிவலிங்கம் மற்றும் முருகர் சிற்பமும் காணப்படுவது சிறப்பு.
தலையில் கரண்ட மகுடம் தரித்துப் பருத்த இடையுடன் அமர்ந்த கோலத்தில், வலக் கை அருள்பாலிக்கும் அபய முத்திரையிலும், இடக் கை தொங்கவிடப்பட்ட நிலையிலும் அழகுறத் தவ்வை வடிக்கப்பட்டுள்ளது. தவ்வையின் தலையருகே வலப்புறம் காக்கைக் கொடியும், இடப்புறம் துடைப்பமும் காட்டப்பட்டுள்ள நிலையில் தன் மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் காட்சி தருகிறது. பல்லவர் கலைபாணியில் உள்ள இச்சிற்பம் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இத்தவ்வையின் அருகே 2 அடி பலகைக் கல்லில் 8 பேர் வரிசையாக நின்ற கோலத்தில் ஒரு சிற்பம் உள்ளது. நடுவில் ஆணும் இருபுறம் பெண்களும் உள்ள இச்சிற்பம் என்ன சிற்பம் என்று அறிய முடியவில்லை.
இக்கோயிலுக்கு அருகே உள்ள வயல்வெளியில் 3 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பலகைக் கல்லில் தாமரை மலர் மீது பத்மாசன கோலத்தில் அமர்ந்த நிலையில் முருகர் சிற்பம் காணப்படுகிறது.
தலையைத் தடித்த ஜடாபாரம் அலங்கரிக்க, வட்ட முகத்தில் தடித்த உதடுகளும், பெரிய விழிகளுடன் இருகாதுகளிலும் பத்ர குண்டலமும் கழுத்தில் சவடி போன்ற ஆபரணமும் தரித்து வலது கையை நெஞ்சருகே வைத்து அக்கமாலையைப் பிடித்தவாறு தனது இடக்கையைத் தொடைமீது வைத்து கம்பீரமாகக் காட்சி தருகிறார். இதுபோன்ற முருகர் சிற்பம் காண்பது மிக அரிதாகும்.
இச்சிலை அமைப்பு மற்றும் அணிகலன்கள் வைத்து இம்முருகரை 8-ம் நூற்றாண்டுச் சிற்பமாகக் கருதலாம்.
இதன் மூலம் கி.பி 8-ம் நூற்றாண்டு வாக்கில் பல்லவர் ஆட்சியின் கீழ் இப்பகுதி செழிப்புற்று இருந்தமையை அறிய முடிகிறது.