ஐபிஎல் தொடரில் CSK அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் ரிஷி தவான் எதற்காக முகக்கவசம் அணிந்து பந்து வீசினார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 188 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் 27 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரை வீசிய ரிஷி தவான் தோனியை அவுட் செய்தது மட்டுமின்றி, 15 ஓட்டங்கள் மட்டும் விட்டுக் கொடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்தார்.
இந்த போட்டியில் அவர் முகக்கவசம் அணிந்து வந்து பந்துவீசினார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், முதல் முறையாக முகக்கவசம் அணிந்து பந்துவீசிய நபர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.
ஆனால் அவர் முகக்கவசம் அணிந்து விளையாடியதற்கான காரணம் சோகமானது.
ரஞ்சி போட்டியில் அவர் விளையாடிய போது துடுப்பாட்ட வீரர் அடித்த பந்து ரிஷி தவானின் முகத்தை பலமாக தாக்கியது.
இதனால் ரத்த கொட்டிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் குணமானாலும், மீண்டும் அவரது முகத்தில் பந்து பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் முகக்கவசம் அணிந்து விளையாடினார்.
இதுதொடர்பாக அவர் பேசியபோது, ‘நான் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறேன். அதனால் ரஞ்சி தொடரில் காயம் அடைந்தபோது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. நான் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
இதனால் நான்கு போட்டிகளை நான் தவறவிட வேண்டியிருந்தது.
ஆனால் நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன், இப்போது தேர்வுக்கு தயாராக இருக்கிறேன். கடுமையாக பயிற்சி செய்து வருகிறேன், மீண்டும் மீண்டு வருவேன் என்று நம்புகிறேன்’ என தெரிவித்தார். ஆனால் இந்த உண்மையை அறியாத ரசிகர்கள் பலர் அவரை பார்த்ததும் கேலி செய்தது வேதனைக்குரிய ஒன்றாக இருந்தது.