சினிமா நடிகர் விமல் கடந்த 2020-ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், “தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அவர் நண்பர்கள் சிலர், என் பெயரைப் பயன்படுத்தி, போலியான ஆவணங்களைத் தயார் செய்து தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னர் வகையறா பட விற்பனையில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்திருக்கின்றனர்” என்று விமானால் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், “நடிகர் விமல் மன்னர் வகையறா படத்துக்காகப் பணம் வாங்கிவிட்டு, உரிய நேரத்தில் திருப்பி தராமல் மோசடி வருகிறார்” என்று புகார் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக, நடிகர் விமல் இந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
பின்னர் இந்த விசாரணை குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விமல், “மன்னர் வகையறா திரைப்படம் எடுத்த நேரத்தில் வரவு செலவு கணக்கில் நடைபெற்ற பண மோசடி குறித்தும், அந்த குற்றச்சாட்டுக்கு என்னிடம் உள்ள ஆவணங்கள் குறித்தும், தயாரிப்பாளர் சிங்காரவேலன் செய்த மோசடி குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கிக் கூறினேன்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் மன்னர் வகையறா திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலனை விருகம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவரின் நண்பர்களின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருப்பூர் கணேசனின் மகள் ஹேமலதா என்பவர், நடிகர் விமல் மீது பண மோசடி செய்ததாகப் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.