சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு அத்துறையின் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பதில் அளித்துப் பேசியதாவது:
செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆக.10 வரை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் 25 லட்சம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு உலகத் தரத்தில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
பொதுமக்களுக்கு விளையாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 இடங்களில் தலா ரூ.30 லட்சம் வீதம் ரூ.3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கிலும், திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கிலும் தலா ரூ.7 கோடியே 70 லட்சம் செலவில் செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கப்படும்.
கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பில் சர்வதேச தரத்தில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் ஏற்படுத்தப்படும். மாநில விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.4 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். சென்னையில் இளைஞர்களின் குத்துச்சண்டை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2கோடி செலவில் மேலும் ஒரு குத்துச்சண்டை அகாடமி அமைக்கப்படும்.
நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.