நடிகர் விமல்மீது ஏற்கெனவே விநியோகஸ்தர் சிங்காரவேலன் மற்றும் அவரது நண்பர் கோபி ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து `மன்னர் வகையறா’ படத்தின் தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசனின் மகள் ஹேமா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பண மோசடி புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். இந்நிலையில் நடிகர் விமல், விநியோகஸ்தர் சிங்காரவேலன், கோபி இருவருக்கும் மாலை ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். அதில் அவர் பேசியிருப்பதாவது.
”சிங்காரவேலன் சார், கோபி அண்ணனுக்கு வணக்கம். என்னை மெருகேத்தி மேன்மைப்படுத்தின உங்களுக்கு நன்றி. இந்த அவமானங்கள், தலைகுனிவு, மன உளைச்சல்களால ஐயோ, இப்படிப் பண்றாங்களேன்னு வெம்பிப் போய்க்கிடந்தேன். இந்த நிலையில் திடீர்னு எனக்கு பாசிட்டிவ் எனர்ஜி வந்த மாதிரி ஆனேன். அதையெல்லாம் ஒரு சவாலா எடுத்துக்கிட்டு ஓடணும் என்கிற பாசிட்டிவ் எனர்ஜியை எனக்குள்ள நீங்க ஏத்தியிருக்கீங்கனு நான் நம்பறேன்.
கண்டிப்பா நான் ஓடிக்கிட்டே இருப்பேன். இந்த வருஷத்துக்குள்ள உங்க கடன் எல்லாத்தையும் அடைச்சிட்டு நானும் நிம்மதியா இருப்பேன். உங்களையும் நிம்மதியா வச்சுட்டு எல்லாரும் சேர்ந்து ஜெயிப்போம்ங்கற ஒரு நல்லமனப்பான்மையோட ஓடறேன். வேலி போட்டாலும் ஓடுவேன். காம்பவுண்ட் போட்டா ஏறிக்குதிச்சு ஓடுவேன். ஓடிக்கிட்டே இருப்பேன். என்னை ஓட வச்ச உங்களுக்கு ரொம்ப நன்றிண்ணே. என்னை பாராட்டுகிற அந்த காலம் கண்டிப்பா வரும்னு நான் நம்பறேன். அந்த காலம் வரும்.. வரும். நன்றி” என ஆடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார்.