புதுடெல்லி:
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் காரணமாக, 1990களின் முற்பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து 64,827 காஷ்மீர் பண்டிதர்கள் குடும்பங்கள் வெளியேறி ஜம்மு, டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் குடியேறியதாக மத்திய அரசு கூறி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முதன்முதலில் தலைதூக்கிய 1990 முதல் 2020 வரை 14,091 பொதுமக்கள் மற்றும் 5,356 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கும், பயங்ரவாதத்துக்கும் தொடர்பு உள்ளது. காஷ்மீர் பண்டிதர்கள் தவிர, சில சீக்கிய மற்றும் முஸ்லிம் குடும்பங்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஜம்மு, டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். ஜம்முவின் மலைப் பிரதேசங்களில் இருந்து 1,054 குடும்பங்கள் ஜம்மு சமவெளிக்கு இடம்பெயர்ந்தன’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.