வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகம் கைமாறும் சூழலில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பராக் அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு இழப்பீடாக இந்திய ரூபாய் மதிப்பில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை எலான் மஸ்க் வழங்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் இந்தியாவில் பிறந்த பராக் அக்ரவால். மும்பை ஐஐடியில் பிடெக் பிரிவில் கம்யீட்டர் சைன்ஸ் பயின்றவர். பின்னர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கேயே பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி பின் அமெரிக்க குடியுரிமை பெற்று குடியேறினார்.
பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம், யாஹூ நிறுவனங்களில் சிறிய அளவிலான எஞ்சினியர் தொடங்கி பெரிய அளவிலான குழு தலைவர் பொறுப்புகளை வகித்தார். கடந்த 2011ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலையில் இணைந்தார். அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்பத் தலைவர் ஆக இருந்த ஆடம் அப்பதவியில் இருந்து விலகியதை அடுத்து மார்ச் 8, 2018ல் பராக் அக்ரவால் ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) பொறுப்பேற்றார்.
2021 நவம்பரில் பராக் அகர்வால் ட்விட்டரின் சிஇஓவாக பதவி ஏற்றார். இந்தநிலையில் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. அந்த அறிவிப்பு முறைப்படி வெளியாகி உள்ளது.
ட்விட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில் இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார். ஊழியர்களின் கூட்டம் ஒன்றில் பேசிய பாரக் அகர்வால் கூறுகையில் ‘‘ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது’’ எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பாரக் அகர்வால் உள்ளிட்ட சில ஊழியர்கள் நிறுவனம் கைமாறுவதில் அதிருப்தியில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் பாரக் அகர்வாலை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்தால் அவருக்கு இழப்பீடாக இந்திய ரூபாய் மதிப்பில் 325 கோடி ரூபாய் வரையிலும் எலான் மஸ்க் வழங்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
அவர் பதவியேற்றுகும்போதே இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பணி வழங்கிய 12 மாதங்களுக்குள் பணிநீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு அமெரிக்க டாலரில் 42 மில்லியன் வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி நிறுவனமான ஈக்விலார் தெரிவித்துள்ளது.
பாரக் அகர்வால் ஆண்டுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய் அடிப்படை சம்பளமாக பெறுகிறார். இதனை தவிர ட்விட்டர் நிறுவனத்தில் 96 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் காலாண்டுகளில் அவருக்கு சம்பள உயர்வும் வழங்கப்படுகிறது. அவர் பணியில் சேரும்போதே இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.