லாகூர் :
பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான ஷபாஸ் ஷெரீப் (வயது 70) பிரதமராகி உள்ளார்.
அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் அந்த நாட்டில் இருந்து தப்பி லண்டனில் வசித்து வருகிறார். அவருக்கு எதிராக வழக்குகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட் ஒன்றை பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. இதன்படி, வருகிற 2032ம் ஆண்டு ஏப்ரல் வரை 10 ஆண்டுகளுக்கு இந்த புதிய பாஸ்போர்ட் செல்லுபடியாகும்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நவாசின் பாஸ்போர்ட் காலாவதியான பின்பு, இம்ரான் கானின் அரசு அதனை புதுப்பிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.
ஷெபாஸ் அமைச்சரவையில் கடந்த வாரம் பதவியேற்று கொண்ட பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரானா சனாவுல்லா கூறும்போது, 3 முறை பிரதமராக இருந்த ஒருவருக்கு தேசிய குடிமகன் என்ற மதிப்பு வழங்கப்படாதது துரதிர்ஷ்டவசம் என்று கூறியுள்ளார்.
நவாசுக்கு மருத்துவ அடிப்படையில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் 8 வார ஜாமீன் வழங்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு பின், வெளிநாட்டுக்கு சிகிச்சை எடுத்து கொள்ள செல்ல 4 வார கால அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை நவாஸ் லண்டனிலேயே உள்ளார்.
இந்நிலையில், புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ள நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். பாகிஸ்தானை விட்டு நவாஸ் செல்ல அனுமதித்தது தன்னுடைய அரசின் மிக பெரிய தவறு என்று இம்ரான் கான் கடந்த பிப்ரவரியில் குறிப்பிட்டார்.