புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
கடந்த 19-ந் தேதி பாதிப்பு 1,247 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 5 நாட்கள் பாதிப்பு அதிகரித்து 24-ந்தேதி 2,593 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் நேற்று சற்று குறைந்து 2,541 ஆக இருந்தது. இன்று 2-வது நாளாக புதிய பாதிப்பு குறைந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக டெல்லியில் 1,011 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அங்கு தொடர்ந்து 4-வது நாளாக தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது.
அரியானாவில் 470, கேரளாவில் 290, உத்தரபிரதேசத்தில் 210, மிசோரத்தில் 102 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 62 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதனால் சில மாநிலங்களில் விடுபட்ட மரணங்கள் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் அசாமில் விடுபட்டிருந்த 1,347 மரணங்கள், கேரளாவில் 47 இறப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதவிர நேற்று பஞ்சாபில் 4 பேர், டெல்லியில் ஒருவரும் சேர்த்து தொற்று பாதிப்பால் மேலும் 1,399 பேர் இறந்துள்ளார். இதனால் மொத்தபலி எண்ணிக்கை 5,23,622 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்தவர்களில் நேற்று 1,970 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 23 ஆயிரத்து 311ஆக உயர்ந்தது. தற்போது 15,636 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றுமுன்தினத்தை விட 886 குறைவு ஆகும்.
இதற்கிடையே நேற்று 22,83,224 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 187 கோடியே 95 லட்சத்தை கடந்துள்ளது.