புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தொழிலதிபர் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வரும் நிலையில், கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் நிஜாமின் தோட்டத்தில், கடந்த 15 நாட்களுக்கு முன் வந்து தங்கி இருந்த ஒரு பெண் உள்ளிட்ட மூவர் கொலை சம்பவம் நடந்த அன்று காலை முதல் தலைமறைவு ஆகியுள்ளனர். இதனால் அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்தும், அவர்களை கண்டறிந்து கைது செய்யும் பணிகளிலும், தனிப்படை போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருவது இவ்வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள ஆவுடையார்பட்டிணத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் நிஜாம். இவர், தனது மனைவி ஆயிஷா பீபியுடன் நேற்று முன்தினம் இரவு திரவியா தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து வராண்டாவில் அமர்ந்து செல்ஃபோன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது மர்மநபர்களால் கொடூரமாக, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். பின் கொள்ளையர்கள் அவரது வீட்டிலிருந்த 170 சவரன் நகைகளையும் கொள்ளையடித்து சென்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய, திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், 6 தனிப்படைகள் அமைத்து, போலீசார் பல்வேறு கோணங்களிலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலும் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய திருப்பமாக, கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் நிஜாமின் தோட்டத்தில், கடந்த 15 நாட்களுக்கு முன் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் வெளியூர்களில் இருந்துவந்து தங்கி இருந்து, வெளியில் வேலைக்கு சென்று வந்ததும், அவர்களுடன் அடையாளம் தெரியாத மற்றொரு நபரும், தங்கி இருந்ததும் தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் மூவரும் யார்? ஏன் அவர்கள் மூவரையும் நிஜாம் தனது தோட்டத்தில் தங்க வைத்தார்..? என்பது குறித்து அவரது மனைவி ஆயிஷா பீபியிடம் போலீசார் 2 மணி நேரத்திற்கு மேலாக துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர்.
அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம், திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், தஞ்சாவூர் ஏஎஸ்பி ஸ்டாலின், திருவாரூர் ஏஎஸ்பி பிருந்தா, புதுக்கோட்டை ஏடிஎஸ்பி ஜெரின பேகம் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர். அவரது மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குற்றவாளிகள் குறித்து பல்வேறு கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அவரது தோட்டத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் மாசிலாமணி என்பவரின் குடும்பத்தினரிடமும், ஏடிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தனிப்படை போலீசாரும், அந்த மூவர் குறித்த புகைப்படம் மற்றும் அடையாளங்களின் அடிப்படையில் அவர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலதிபர் நிஜாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முதலில் நகைக்காக கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணையை தொடங்கினர். பின்னர் அதன் பின்பு தொழில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது அவரது வீட்டில் வெளியூரில் இருந்து வந்திருந்த ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள், கடந்த 15 நாட்களாக தங்கி இருந்ததும், கொலை சம்பவம் நடந்த அன்று காலை தான் அவர்கள் அங்கிருந்து தலைமறைவானதும் இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மூவரையும் கண்டறிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டால், அவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டார்களா அல்லது அவர்கள் மூலம் வேறு யாரேனும் இந்த கொலை சம்பவத்தை செய்தார்களா, அப்படி எனில் எதற்காக அவர்கள் இந்த கொலையை செய்தார்கள், அவர்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து முழுமையாக தெரியவரும் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM