பெய்ஜிங்: கரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
சீனாவில் 333 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் தொகையில் 88.3 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசி போட்டுள்ளது. எனினும் கடந்த சில மாதங்களாக சீனாவில் கரோனா வைரஸ் பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் நாள்தோறும் 20,000-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக வர்த்தக நகரான ஷாங்காயில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. அந்த நகரில் நாள்தோறும் 2,500 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. கடந்த 1-ம் தேதி முதல் ஷாங்காய் நகரில் ஊரடங்கு அமலில் உள்ளது. வைரஸ் பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் இரும்பு தடுப்புகள் மூலம் வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடுகளை மீறும் மக்களுக்கு கடுமையான தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
வடகொரியாவை ஒட்டி அமைந்துள்ள சீன நகரங்கள், கிராமங்களில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக சீன தலைநகர் பெய்ஜிங்கிலும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள் தீவிரம்
வெளிமாவட்டங்களில் இருந்து பெய்ஜிங் வருவோர் கண்டிப்பாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கின் சாயாங் பகுதியில் 35 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல பெய்ஜிங்கின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே ஷாங்காயை போன்று பெய்ஜிங்கிலும் ஊரடங்கு அமல் செய்யப்படலாம் என்று மக்கள் மத்தியில் அச்சம் எழுந்திருப்பதால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் அலை மோதுகின்றனர். பெரும்பாலான கடைகளில் இருப்பு முழுமையாக காலியாகி உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கரோனா பரவலால் சீனாவின் பொருளாதாரமும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப் பட்டிருக்கிறது.