போலீஸ் விசாரணையில் மரணம் அடைந்த விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்- மு.க.ஸ்டாலின்

சென்னை:

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், சுரேஷ் இருவரும் புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே கடந்த 19-ந் தேதி இரவு போலீசாரின் வாகன சோதனையின் போது கஞ்சா வைத்திருந்ததாக பிடிபட்டனர்.

அவர்களை தலைமை செயலக காலனி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றிருந்த சமயத்தில் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இதில் காயம் அடைந்த சுரேஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த பிரச்சினை இன்று சட்டசபையில் எழுப்பப்பட்டது. இதை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுத்துக் கொண்டு கட்சித்தலைவர்களை பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார்.

விக்னேஷ் மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, செல்வ பெருந்தகை (காங்கிரஸ்), வேல் முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) உள்ளிட்ட ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் பேசினார்கள்.

இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சென்னை மாநகர காவல் துறையினர் இரவு வழக்கமான வாகன சோதனை நடத்திய போது பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், சுரேஷ் இருவரும் புரசைவாக்கம் அருகே ஆட்டோவில் வந்தனர்.

கெல்லீஸ் அருகே அந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டதில் கஞ்சா, மதுபாட்டில் உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது போதையில் இருந்ததால் அவர்கள் சரியாக பதில் கூறவில்லை. உடனே போலீஸ் நிலையத்துக்கு அழைத்த போதும் வர மறுத்தனர்.

அதோடு போலீசாரையும் கத்தியால் தாக்க முயற்சித்தனர். அதை தடுத்து போலீஸ் நிலையத்துக்கு அவர்களை அழைத்து சென்றனர். விசாரணையில் சுரேஷ் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 11 வழக்குகளும், விக்னேஷ் மீது 2 கன்னகளவு வழக்கும் இருப்பது தெரியவந்தது.

இதனால் அவர்கள் 2 பேருக்கும் அடுத்த நாள் போலீஸ் நிலையத்திலேயே காலை உணவு வழங்கப்பட்டது. இதனால் விக்னேசுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனஙர். பின்னர் கீழ்ப் பாக்கம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் சந்தேக சாவு என வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 20-ந்தேதி மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டு உறவினர்களிடம் அவர்களின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக தலைமை செயலக காலனி போலீஸ் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன் ராஜ், ஊர்க்காவல் படை காவலர் தீபக் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு டி.ஜி.பி. உத்தரவின் பேரில் கடந்த 24-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. விக்னேஷ் மரணம் குறித்து சட்டப்படி அனைத்து நடைமுறைகளையும் அரசு எடுத்து வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

இதுகுறித்து சட்டசபையில் பேசிய உறுப்பினர்கள் சில கோரிக்கைகளை வைத்தனர். வழக்கு முடிவு எப்படி இருந்தாலும் மரணம் அடைந்த ஏழ்மையான விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயம் அடைந்த சுரேசின் உயர் சிகிச்சை செலவை அரசே ஏற்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.