மதுரை:
மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு புதுநத்தம் ரோட்டில் சுமார் 7.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
சுமார் ரூ.545கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மேம்பால பணி துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ந் தேதி நவீன ட்ராலிகள் மூலம் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றபோது நாராயணபுரம் பகுதியில் மேம்பாலத்தின் ஒரு பகுதி சரிந்தது.
அப்போது கட்டிட பணியில் இருந்த ஒரு தொழிலாளி உயிரிழந்தார். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து நேரில் பார்வையிட்ட நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு இந்த விபத்து குறித்து உயர்மட்ட நிபுணர் குழு விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து இந்த குழு பல தரப்பு சாட்சியங்களின் அடிப்படையில் தனது விசாரணையை நடத்தி முழுமையான அறிக்கையை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரசிடம் சமர்ப்பித்தது.
அதில் தனியார் கட்டுமான நிறுவனம் மற்றும் ஆலோசனை வழங்கிய நிறுவனங்கள் சரியான முறையில் கட்டுமான பணியை மேற்கொள்ளாதது, இந்த மேம்பாலப்பணியில் அனுபவமில்லாத, தொழில்நுட்பம் அறியாத பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டது விபத்துக்கான முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பான அறிக்கை மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் கட்டுமான நிறுவனங்களிடம் பணியாற்றிய என்ஜினீயர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களும் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த மேம்பாலப் பணியில் ஈடுபட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்திற்கு மேம்பால கட்டுமானம் தொடர்பாக ஆலோசனை வழங்கிய ஆலோசனை நிறுவனத்திற்கும் 40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தொகையை விரைவில் செலுத்த வேண்டும் என்றும் இந்த நிறுவனங்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் புதுநத்தம் ரோட்டில் கட்டப்பட்டு வரும் இந்த பறக்கும் மேம்பாலப் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.