மருத்துவ மாணவர்களுக்கு இலவச டேப்லெட் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், 2021-22-ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற்ற 555 மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கிடும் அடையாளமாக 75 மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கினார். 
2021-22-ஆம் கல்வி ஆண்டில் மாநில ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 5,932 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுக்கும், பல் மருத்துவத்தில் 1,460 இடங்களுக்கும் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளார்கள்.  இவர்களுள் 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் 445 நபர்கள் மருத்துவப் படிப்பிலும், 110 மாணவர்கள் பல் மருத்துவப் படிப்பிலும் சேர்ந்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு இன்றைய நிகழ்ச்சியின்போது  கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மருத்துவ மாணவி செல்வி ஹேமவர்ஷினி  முதலமைச்சரை வாழ்த்தி கவிதை வாசித்தார். அதனைத் தொடர்ந்து, கையடக்க கணினிகள் பெற்றுக் கொண்ட மருத்துவ மாணவர்களின் சார்பாக யுவராஜ், செல்வி தனிஷ்கா ஆகியோர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். 
இந்த நிகழ்ச்சியில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்,  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் நா. எழிலன், கே. கணபதி, ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மருத்துவக் கல்வி இயக்குநர்  நாராயணபாபு, கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குநர் / செயலாளர், தேர்வுக் குழு வசந்தமணி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பதிவாளர் அஸ்வத் நாராயணன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.