புளோரிடா: மீண்டும் நான் ட்விட்டருக்குத் திரும்ப மாட்டேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கும் நிலையில் இதனை ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் சமூக வலைதளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன மஸ்க். இந்த செய்தி உறுதியானது முதலே அமெரிக்காவின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் அவரிடம் ஒரு கோரிக்கை வைத்து வருகின்றனர். அது அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியைச் சார்ந்தவருமான் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது.
கடந்த 2021 வாக்கில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்தமைக்கும், ட்விட்டரின் கொள்கையை மீறிய காரணத்திற்காகவும் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. இந்நிலையில், பேச்சு சுதந்திரம் குறித்து மஸ்க் அண்மையில் பேசியிருந்தார். அதனால் டிரம்பின் கணக்கு மீண்டும் ஆக்டிவேட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அது குறித்த தனது கருத்தை டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“நான் மீண்டும் ட்விட்டருக்குத் திரும்ப மாட்டேன். ட்ரூத் தளத்தில் இருக்க முடிவு செய்துள்ளேன். ட்விட்டரை வாங்கும் எலான் மஸ்க் அதனை மேம்படுத்துவார் என நம்புகிறேன். அவர் ரொம்பவே நல்ல மனிதர். ஆனாலும் நான் ட்ரூத்தை தான் பயன்படுத்துவேன்” என தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
ட்ரூத் சோசியல் என்ற சமூக வலைதளத்தை சொந்தமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் நிறுவினார் ட்ரம்ப். தற்போது அவர் அந்த தளத்தை பயன்படுத்தி வருகிறார்.