டெக்சாஸ்: ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்குகிறார் எலான் மஸ்க். இந்நிலையில், ட்விட்டர் தளத்தில் வெறுப்புப் பேச்சு அதிகரிக்குமோ என்பது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கவலை கொண்டுள்ளதாக தெரிகிறது.
உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது உறுதியாகி உள்ளது. அதன் காரணமாக உலக மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ட்விட்டர் தளத்தின் கட்டுப்பாடுகள் இனி மஸ்க் கட்டுப்பாட்டில் இருக்கும் என தெரிகிறது. பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை உலக அளவில் மில்லியன் கணக்கிலான பேர் ட்விட்டர் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘பேச்சு சுதந்திரத்தை விரும்புபவன் நான்’ என தனக்கு தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு வருகிறார் மஸ்க். ட்விட்டரின் கொள்கைகள் சிலவற்றை பகிரங்கமாக விமர்சித்தவர் அவர். ட்விட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் உறுதியான நிலையில், ‘என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் ட்விட்டரில் இருப்பார்கள் என நம்புகிறேன். ஏனெனில் அது தான் பேச்சு சுதந்திரம்’ என ட்வீட் செய்துள்ளார் மஸ்க்.
“பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயக செயல்பாட்டின் அடித்தளமாகும். மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு இன்றியமையாத பல விஷயங்கள் விவாதிக்கப்படும் தளமாக ட்விட்டர் உள்ளது. அதனால் முன்பை காட்டிலும் ட்விட்டரை சிறந்ததாக மாற்ற விரும்புகிறேன். புதிய அம்சங்கள் கொண்டுவரப்படும். அதன் மூலம் ட்விட்டர் மேம்படுத்தப்படும். ட்விட்டருக்கு என மிகப்பெரிய சக்தி உள்ளது. இந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்” எனவும் அவர் சொல்லியிருந்தார்.
“ட்விட்டருக்கு யார் உரிமையாளர் என்பது முக்கியமல்ல. அந்த தளத்தை சார்ந்து உலகம் முழுவதும் உள்ள மக்களின் உரிமைகளுக்கு அந்நிறுவனம் மதிப்பளிக்க வேண்டிய பொறுப்புகள் உள்ளது. அதனால் அதன் கொள்கைகள், அம்சங்கள், வழிமுறைகள் என மேற்கொள்ளப்படும் சிறிய மற்றும் பெரிய மாற்றங்கள் கூட பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும். அதை அந்நிறுவனம் கவனிக்க வேண்டியுள்ளது.
கருத்து சுதந்திரம் என்பது முழுமையான உரிமை அல்ல. அதனால் தான் ட்விட்டர் நிறுவனம் தனது பயனர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய விஷயத்தில் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார் டிஜிட்டல் உரிமைகள் ஆய்வாளரும், வழக்கறிஞருமான டெபோரா பிரவுன்.
மனித உரிமை ஆர்வலக் குழுக்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு ட்விட்டர் தரப்பில் பதில் ஏதும் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இருந்தாலும் தனி ஒரு நபரின் கட்டுப்பாட்டில் இவ்வளவு பெரிய அதிகாரம் இருப்பது ஆபத்து எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெறுப்புப் பேச்சை கட்டுப்படுத்த ட்விட்டரின் கொள்கை மற்றும் வழிமுறைகள் என்ன ஆகும்?
ட்விட்டர் தளத்தை மஸ்க் கையகப்படுத்தியுள்ள நிலையில் ட்விட்டர் தளத்தில் வெறுப்புப் பேச்சை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் இனி என்ன ஆகும் என்பது தங்களுக்கு கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளது அம்னஸ்டி இன்டர்நேஷனல். அந்த கட்டுப்பாடுகளில் மாற்றம் இருக்குமோ? எனவும் கவலை கொண்டுள்ளது அம்னஸ்டி.
தனது பயனர்களுக்கு எதிராக வன்முறை மற்றும் தவறான பேச்சுக்கு துணை போகும் ட்விட்டர் நமக்கு தேவையா எனவும் சொல்லியுள்ளார் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (அமெரிக்கா) தொழில்நுட்பம் மற்றும் மனித உரிமைகள் இயக்குநர் மைக்கேல் க்ளீன்மேன்.
அதே நேரத்தில் மஸ்கின் ட்விட்டர் ஒப்பந்தம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டது அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை. இருந்தாலும் பயனர்களால் போஸ்ட் செய்யப்படும் கன்டென்டுகளின் மீதான பொறுப்புகளிலிருந்து ஆன்லைன் நிறுவனங்களை பாதுகாக்கும் அமெரிக்க சட்டப் பிரிவு 230-யை ரத்து செய்ய வெள்ளை மாளிகை தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் தகவல்.