வேலூர்: மாணாக்கர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் சில மாணவர்கள் பள்ளியின் டெஸ்க் பெஞ்சுகளை அடித்து நொறுக்கிய விவகாரம் தொடர்பான வீடியோ வெளியாகி, அரசு பள்ளியின் அவலம் பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக பள்ளி மாணவர்களின் நடவடிக்கை, ஆசிரியர்களே அஞ்சும் வகையில் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் வகுப்பறைக்குள் பாயை விரித்து படுத்து உறங்கிய மாணவனை தட்டிக்கட்ட ஆசிரியரை மாணவன் தாக்கும் வீடியோ வைரலான நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு வேலூர் தொரப்பாடி அரசு பள்ளி மாணாக்கர்கள் சிலர் அங்குள்ள டெஸ்க், பெஞ்சுகளை அடித்து உடைக்கும் காட்சி தொடர்பான வீடியோ வைரலானது.
இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். சமீபத்தில் இங்கு பிளஸ் டூ படித்துவரும் மாணவர்கள் சிலர் வகுப்பறையில் உள்ள மேசைகளை உடைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதில், மேஜைகளை உடைத்து அட்டூழியம் செய்த மாணவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களையும், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வி மாவட்ட அலுவலர் சம்பத், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோரை அலுவலகத்தக்கு வரும் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரை நேரில் சந்தித்தபோது, மாணவர்களை பார்த்து ஆட்சியர் பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், உங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேறாமல் இப்படி செய்கிறீர்கள்? பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதி இல்லை என்பதற்காக மேசை உடைப்பதா? என்று எச்சரித்ததுடன், மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.
பள்ளி வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக 10 மாணவர்களை வரும் 4ஆம் தேதி வரை தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் வரலாம். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பெற்றோருடன் வந்து மாணவர்கள் வாங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் எடுத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தர விட்டு உள்ளார். உத்தரவை மீறி செல்போன்களை வகுப்பறைக்குள் கொண்டு வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.