பாரிஸ்: பிரான்ஸ் அதிபராக 2-வது முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் இமானுவல் மேக்ரான் (44).
பிரான்ஸில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் லா ரிபப்ளிக் என் மார்ச் கட்சி வெற்றி பெற்றது. கட்சி தலைவர் இமானுவல் மேக்ரான் (அப்போது 39), இளம் வயதில் அதிபராகி சாதனை படைத்தார். அவரது பதவிக் காலம் அடுத்த மாதம் முடியவுள்ள நிலையில், அங்கு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், அதிபர் மேக்ரான், நேஷனல் ரேலி கட்சித் தலைவர் மரின் லீ பென் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். யாருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்கவில்லை.
எனவே, 2-ம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்நாட்டு சட்டப்படி, முதல்கட்ட தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற மேக்ரான் மற்றும் லீ பென் மட்டுமே வேட்பாளராக களமிறங்கினர். இதில் பதிவான வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மேக்ரான் 58.5% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். லீ பென் 41.5% வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
இதன்மூலம் கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை மேக்ரான் படைத்துள்ளார். தேர்தல் வெற்றி குறித்து மேக்ரான் கூறும்போது, “ஒருவரையும் சாலையின் ஓரத்தில் ஒதுங்க விடமாட்டோம். நாம் செய்வதற்கு நிறைய உள்ளன. நாம் மிக மோசமான காலகட்டத்துக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உக்ரைன் மீதான போர் நினைவுபடுத்துகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண பிரான்ஸ் முயற்சிக்கும்” என்றார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நண்பர் இமானுவல் மேக்ரானுக்கு வாழ்த்துகள். இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த அவருடன் தொடர்ந்து பணியாற்றுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி உள்ளிட்ட தலைவர்களும் மேக்ரானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தேர்தல் தோல்வியை லீ பென் ஒப்புக்கொண்டுள்ளார். இவர் தொடர்ந்து 3 அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.