மீண்டும் ஸ்ரீ ராம் சமாஜ் வசமாகும் அயோத்தியா மண்டபம்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அரசு எடுத்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்யா மண்டபம் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அயோத்யா மண்டபத்தை கடந்த 2013ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இராம சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014 ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி வி.எம். வேலுமணி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி ம்ற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
image
அப்போது, ஸ்ரீராம் சமாஜ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், அயோத்யா மண்டப நிர்வாகத்தை எடுத்து அரசு உத்தரவை எதிர்த்த வழக்கில் அரசுத் தரப்பில் எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் தங்களது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்றார். மேலும், எந்த காரணமும் இல்லாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஸ்ரீ ராம் சமாஜ்ஜின் பள்ளி மற்றும் திருமண மண்டபத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மத ரீதியான நடவடிக்கைகள் நடந்ததால் அரசு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், மாற்று தீர்வு உள்ளதாகவும், தனி நீதிபதி முன் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்றார்.
image
பல வகைகளில் நிதி வசூலித்த இந்த அமைப்பு, வருவாய் விவரங்களை, அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை எனவும், உத்தரவை எதிர்த்து எப்போது வேண்டுமானாலும் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாற்று தீர்வு உள்ளது எனக் கூறி பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கை தள்ளுபடி செய்யமுடியாது எனவும், தனியார் அமைப்பான ஸ்ரீராம் சமாஜ்ஜின் நடவடிக்கைகளில் அரசு தலையிட முடியாது எனவும் தெரிவித்தனர். 2014ம் ஆண்டு இடைக்கால உத்தரவு வழங்கிவிட்டு, 8 ஆண்டுகளுக்கு பின் மாற்று தீர்வுகாணலாம் எனக் கூறமுடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்கும்படி அனுப்பிய நோட்டீஸில் எந்த விவரங்களும் கூறப்படவில்லை என தெரிவித்தனர்.
image
பின்னர், குற்றச்சாட்டுக்களுக்கு முறையாக ஆதாரங்களை அளித்து, விளக்கம் கேட்டு தமிழக அரசு விசாரிக்கலாம் எனவும், விசாரணையின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்த நீதிபதிகள், அயோத்யா மண்டபத்தை அரசு எடுத்த உத்தரவையும், அந்த உத்தரவை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவையும் ரத்து செய்யப்போவதாகவும் தெரிவித்து, அயோத்தியா மண்டபத்தை மீண்டும் ஸ்ரீ ராம் சமாஜ் வசமே ஒப்படைக்க இருப்பதாகக் கூறி, வழக்கின் மீதான தீர்ப்பை நாளை மதியத்திற்கு தள்ளிவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.