”முந்திரி பழத்தில் இருந்து உற்சாக பானம் இல்லாவிட்டாலும் ஊட்டச்சத்து பானம் தயாரிப்பது குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய வேல்முருகன், பண்ருட்டி பகுதியில் முந்திரி பழங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதன் பருப்பு மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், பழங்கள் வீணாவதால் அதை தடுக்க அந்த பழங்களில் இருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “உற்சாக பானம் இல்லையென்றாலும், ஊட்டச்சத்து பானமாவது தயாரிக்க வேண்டுமென உறுப்பினர் கூறுகிறார். இதை வணிக ரீதியாகவும், தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும். கடந்த திமுக ஆட்சியின் போதே இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. மீண்டும் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM