கரூர் – மதுரை பைபாஸ் சாலையில் உள்ள எல்.வி.பி நகர் பகுதியில் வசிப்பவர் சரவணன் (வயது 46). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர், தனது நிலத்தை கூட்டுப்பட்டாவிலிருந்து தனிப்பட்டாவிற்கு மாற்ற, நில அளவையர் துறையை அணுகியிருக்கிறார். அங்குள்ள பீல்டு சர்வேயரான ரவி (40) என்பவர், இந்த தனிப்பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. முதலில் ரூ 8 ஆயிரம் கேட்டாராம். ஆனால், சரவணன், ‘அவ்வளவு முடியாது’ என்று கூற, இறுதியில் ரூ 5 ஆயிரம் தான் இறுதி என்று கூறி, ‘பணத்துடன் வாருங்கள் உடனே மாற்றித்தருகிறேன்’ என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், பட்டா மாறுதலுக்கு லஞ்சம் தர விரும்பாத சரவணன், இதுகுறித்து கரூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கூறியிருக்கிறார். இதனால், ரவியை கையும் களவுமாக பிடிக்க நினைத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி நடராஜன் தலைமையிலான போலீஸார், முன்னாள் ராணுவ வீரர் சரவணனை பணத்துடன் செல்ல சொல்லியிருக்கின்றனர். அதோடு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மறைந்து நின்றுள்ளனர். இந்த நிலையில், சரவணன் ரசாயனம் தடப்பட்ட பணத்தை ரவியிடம் கொடுக்க, அந்த நேரம் அங்கே வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ரவியை மடக்கிப் பிடித்தனர். மேலும், ரவியின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து, ரவியை கைது செய்தனர்.