மே 15ஆம் தேதி முதல் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்! தமிழகஅரசு தகவல்…

சென்னை: மே மாதம் 15ஆம் தேதி முதல் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழகஅரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

கோடை வாசஸ்தலங்கள் செல்லும் குடிமகன்கள், குடித்துவிட்டு மதுபாட்டில்களை காடுகளில் தூக்கி வீசுவதால், வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,  வனப்பகுதிகளில் வீசிச் செல்லும் உடைந்த பாட்டில்களை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில், ஏப்.25-ஆம் தேதிக்குள் இந்த கண்ணாடி பாட்டில்களை திரும்ப பெற மாற்றுத் திட்டம் வகுக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நீலகிரி மாவட்ட டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு, தமிழக அரசின் சார்பில் கூடுதல் செயலாளர் எஸ்.கே பிரபாகர் அவர்கள் உத்தரவு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப் பட வேண்டும் என்றும், காலி மது பாட்டில்களை மீண்டும் மதுபான கடைகளிலேயே திருப்பி செலுத்தினால் பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்பட வேண்டும் என்றும், நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில், இந்த மது பாட்டில் நீலகிரியில் விற்பனை செய்யப்பட்டது என்பதற்கான முத்திரை இடம் பெற வேண்டும்  எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

மேலும், மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் ஜூன் 15ம் தேதி முதல் அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.