பெங்களூரு:வரும் கல்வி ஆண்டில், மே 16ல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
முன்கூட்டியே பள்ளி, கல்லுாரிகளை திறந்து, வேலை நாட்களை அதிகரித்து, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.கடந்த 2020 மார்ச்சில், கொரோனா தொற்று பரவியதால் பள்ளி, கல்லுாரிகள் சரியாக செயல்படவில்லை. இதனால் மாணவ – -மாணவியர் பாதிக்கப்பட்டனர்.
‘ஆன்லைன்’ வாயிலாக வகுப்புகள் நடந்தாலும் பெயரளவுக்கு தான் நடந்தது; கற்றல் திறன் அதிகரிக்கவில்லை.முடிவுகர்நாடகத்தில் கடந்த ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வு நடத்தப்பட வில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பாடத்திட்டங்கள் குறைக்கப் பட்டு தேர்வுகள் நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டில் பெரும்பாலான நாட்களில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், 2022 – -23ம் கல்வி ஆண்டில் பள்ளி, -கல்லுாரிகளை முன்கூட்டியே திறக்க, கர்நாடக பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அத்துறை வெளியிட்ட அறிக்கை
:கர்நாடகாவில் 2022- – 23-க்கான கல்வி ஆண்டு, மே மாதம் துவங்குகிறது. மே 16ல் பள்ளி, பி.யு.சி., கல்லுாரிகள் திறக்கப்படும். முதல் பருவ வகுப்புகள், அக்டோபர் 2 வரை நடக்கும். இரண்டாவது பருவ வகுப்புகள் அக்டோபர் 17ல் துவங்கி, அடுத்த ஆண்டு 2023 ஏப்ரல் 10 வரை நடக்கும்.
அக்டோபர் 3 – 16 வரை தசரா விடுமுறை விடப்படும்.மாணவர் சேர்க்கை கோடை விடுமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் 11ல் துவங்கி மே 28 வரை இருக்கும். வரும் கல்வி ஆண்டில் 60 அரசு விடுமுறைகள் வருகின்றன. மொத்தம் 256 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும்.அரசு பள்ளி, -கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை மே 16ல் துவங்கி , ஜூலை 31 வரை நடக்கும். ஒருவேளை கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டால், ‘ஆன்லைன்’ வழியாக கல்வி கற்பிக்கப்படும். எக்காரணம் கொண்டும் குழந்தைகள் கற்றலில் இருந்து பாதிக்கப்படக் கூடாது.
வசதிகள்
குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா, காந்தி ஜெயந்தி, அம்பேத்கர் ஜெயந்தி, கர்நாடக ராஜ்யோத்சவா ஆகிய விழாக்களை பள்ளி, கல்லுாரிகளில் கட்டாயம் கொண்டாட வேண்டும்.வேலை நிறுத்தம் உள்ளிட்டவற்றால் வகுப்புகள் நடத்தப்படவில்லை என்றால், வேறு விடுமுறை நாட்களில் வகுப்புகளை நடத்தி அதை ஈடுசெய்ய வேண்டும். கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன், அந்தந்த பள்ளி நிர்வாகங்கள், பள்ளி கட்டடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அங்கு தேவையான வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்க பட்டு உள்ளது.கர்நாடகாவில், வழக்கமாக ஜூனில் தான் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும். ஆனால், கொரோனா பரவலால் பெரும்பாலான நாட்கள் மூடப்பட்டு இருந்ததால், வரும் கல்வி ஆண்டில் 15 நாட்கள் முன்னதாகவே திறக்கப்படுகின்றன.
பள்ளியில் மத போதனைஅமைச்சர் எச்சரிக்கை
தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ், பெங்களூரில் நேற்று கூறியதாவது:ஜூன், ஜூலையில் கொரோனா நான்காம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்து உள்ளனர். திட்டமிட்டப்படி மே 16ல் ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும்.மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்படும். தற்போதைக்கு பள்ளிகள் திறக்கும் முடிவிலிருந்து பின் வாங்க மாட்டோம். இரண்டு ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பெங்களூரின் சில பள்ளிகளில் பைபிள் படிக்கும்படி கட்டாயப்படுத்தியது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த கல்வி நிறுவனங்களிலும் மதம் தொடர்பாக போதிக்க கூடாது. பகவத் கீதை போதிக்கும் போது, எதிர்ப்பு தெரிவிக்கும் புத்திசாலிகள், பைபிளுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.