வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் மொத்தமாக இறக்குமதி செய்த கச்சா எண்ணெயை விட, கடந்த 2 மாதங்களில் இரு மடங்கு இறக்குமதி செய்துள்ளது.
இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி: கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் மற்றும் டெண்டர்கள் அடிப்படையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த துவங்கிய பிறகு, இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் 4 கோடி பாரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. அதேநேரத்தில் கடந்த 2021ம் ஆண்டு முழுவதும் 1.6 கோடி பாரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.இந்தியாவிற்கு தினமும் 50 லட்சம் பாரல் கச்சா எண்ணெய் தேவையில், அதில் 85 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
சவுதி உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், அதன் பாதிப்பை குறைக்க, ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் சுத்திகரிப்பு நிலையங்கள் இறக்குமதி செய்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது வரை ஐஓசி, எச்பிசிஎல், பிபிசிஎல் நிறுவனங்களை விட காட்டிலும், ரிலையன்ஸ் அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இந்த நிறுவனம் ஜூன் காலாண்டு வரை தேவைக்காக 1.5 கோடி பாரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. நயரா எரிசக்தி நிறுவனமும் 80 முதல் 90 லட்சம் பாரல் வரை கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.
நிபுணர்கள் கூறுகையில், ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்த தடை மே மத்தியிலும், ஜூன் மாதத்திலும் அமலுக்கு வருவதால், அதற்கு முன் ரஷ்யாவில் இருந்து அதிகளவு கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Advertisement