நடக்கவே நடக்காது என்று பொருளாதார சீர்திருத்தவாதிகளால் வர்ணிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது. அனைத்து மாநிலங்களின் அரசு ஊழியர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள பழைய ஓய்வூதியத் திட்டம், தமிழ்நாட்டில் எப்போது முதல் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசு ஊழியர்களிடம் எழுந்துள்ளதாக, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ராஜஸ்தான் மாநிலத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் அஷோக் கெலாட், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பை வரவேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 24-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டார். ஆனால், ராஜஸ்தான் அரசால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது; இது வெற்று அறிவிப்பாகவே இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறினார்கள்.
ஆனால், அனைத்து எதிர்மறை கருத்துகளையும் முறியடித்து ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இத்திட்டத்தின்படி ராஜஸ்தான் மாநில அரசு பணிகளில் 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு சேர்ந்த 3 லட்சத்திற்கும் கூடுதலான பணியாளர்கள் இனி ஓய்வு பெறும் போது, அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் குறைந்தது 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்காக இனி அவர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்யப்படாது என்பதால், அவர்களுக்கு 10% ஊதியம் கூடுதலாக கிடைக்கும்; இதுவரை அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 10% ஊதியத்தில் ஓய்வூதியர்களின் மருத்துவ நிதிக்கான சிறு தொகை தவிர மீதமுள்ள தொகை வட்டியுடன் திருப்பித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் கடந்த 18 ஆண்டுகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பையும், மறுமலர்ச்சியையும் வழங்கும் என்பது உறுதி.
இவை அனைத்தையும் கடந்து இந்தியாவில் இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்ற மாயை தகர்க்கப்பட்டிருக்கிறது. இது தான் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் உண்மையாகும். இந்தியாவில் 2004-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தும், தமிழ்நாட்டில் 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூக பொருளாதார பாதுகாப்பை அழித்து விடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடந்த 19 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.
இந்த காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்தாலும் கூட, அதை நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதன்பின்னர் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அறிக்கையை அளித்தது. ஆனால், அதன் மீது முந்தைய அரசில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை பெரும் சாபம். அத்திட்டம் நடைமுறைக்கு வந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட அதற்கான விதிகள் இன்னும் முழுமையாக வகுக்கப்படவில்லை. 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்து கடந்த ஆண்டுகளில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால் அவர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசுப் பணிக்கு சென்றால் இறுதி மூச்சு உள்ளவரை பொருளாதார சிக்கலின்றி வாழலாம் என்பது தான் மக்களின் நம்பிக்கை. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது மக்களின் இந்த நம்பிக்கையையும் தகர்த்து விட்டது. தமிழகத்தில் இந்த நிலை இனியாவது மாற்றப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் எந்த அரசியல் கட்சிக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட டி.எஸ்.ஸ்ரீதர் குழுவின் அறிக்கையும் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதனால், இந்த விஷயத்தில் புதிதாக ஆய்வு செய்ய எந்தத் தேவையுமில்லை. எனவே, தமிழ்நாட்டில் 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்” என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.