புதுடெல்லி: ஏஜிபி ஷிப்யார்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் குஜராத், சூரத் ஆகிய இடங்களில் கப்பல் கட்டுமான தளங்களை இயக்கி வருகிறது. இதன் நிறுவனரும், மேலாண் இயக்குனருமான ரிஷி கம்லேஷ் அகர்வால் உள்ளிட்டோர் வங்கிகளில் ரூ.22,842 கோடி வங்கி கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதன் அடிப்படையில் ஏபிஜி நிறுவனத்தின் மீது கடந்த பிப்ரவரியில் அமலாக்கத் துறையும் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு சொந்தமான மும்பை, புனே மற்றும் சூரத்தில் உள்ள அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.