புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவானது கடந்த ஏப்ரல் 17-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அன்று இரவே நூற்றுக்கணக்கான பெண்கள் ஆராத்திக்குடங்களோடு அணிவகுக்க அம்மன் வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது. ஏப்ரல் 24-ம் தேதி, திருவிழாவின் பொங்கலையொட்டி அனைவரது வீடுகளிலும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான தேரில், அம்மன் எழுந்தருளி திருவீதிகளில் வலம் வந்தார்.
பக்திப் பரவசத்தோடு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடத்தைப் பிடித்து இழுத்து வந்தனர். முன்னதாக பால்குடம், காவடி எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர்.
தேரோடும் நான்கு வீதிகளிலும் தேர் அசைந்தாடி வர, ‘ஓம் சக்தி பரா சக்தி ‘என பக்தர்கள் முழக்கமிட்டனர். தேர்த்திருவிழாவின் போது இங்குள்ள கரைக்காரர்களால் பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், ஒவ்வொரு கரைகாரர் சார்பிலும் தனித்தனியாக பிரமாண்ட வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
வடகாடு, ஆலங்குடி, கொத்தமங்கலம், கீரமங்கலம் என சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். வடகாடு போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இன்று கோயிலில் மஞ்சள் விளையாட்டும் நடைபெறுகிறது. இதையொட்டி மயில் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.