புதுடெல்லி:
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி ஏப்ரல் 10ம் தேதி தொடங்கியது. செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை தற்போது 188 கோடியை கடந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறுகையில், இந்தியாவில் வயது வந்தோரில் 86 சதவீதத்திற்கும் அதிகமானோர் இப்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்தி உள்ளனர், என்றார்.
‘இதுவரை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 188 கோடியை கடந்துள்ளது. இன்று 19 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 18 வயது முதல் 59 வயது வரையிலான நபர்களில் 46044 பேர் முன்னெச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) செலுத்தி உள்ளனர். இதன்மூலம் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தியவர்களின் மொத்த எண்ணிக்கை 5,15,290 ஆக உயர்ந்துள்ளது’ என்றும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.