மே முதல் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். அன்றைய தினம் `அஜித் 61′ குறித்து ஏதாவதொரு அப்டேட் வெளியாகுமா என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அவர்களுக்காகவே, அஜித் – வினோத் – போனி கபூர் கூட்டணியின் அடுத்த தயாரிப்பான `அஜித் 61′ குறித்த தகவல்களுக்காக சில சோர்ஸ்களை முடுக்கிவிட்டோம். கிடைத்த அப்டேட்ஸ் இங்கே…
* ஐதராபாத் புறநகர்ப் பகுதியான ஹைடெக் சிட்டி அருகே அமைந்துள்ள அலுமினியம் ஃபேக்டரி ஏரியாவில், சென்னை அண்ணாசாலையை பிரமாண்டமாக செட் போட்டு, விறுவிறுப்பாக ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.
* இன்றைய தேதிக்கு அஜித் ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறார். அடுத்த 15 நாள்கள் இந்தப் பகுதியில் ஷூட் இருக்குமெனத் தெரிகிறது. பிறந்த நாளான மே முதல் தேதி அஜித் அங்கு இருப்பாரா அல்லது சென்னை வந்துவிடுவாரா என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை.
* படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடவேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளதால் அதற்கேற்றபடி ஷூட்டிங்கைத் திட்டமிட்டு விரைவுபடுத்தி வருகிறார்களாம்.
* படத்தின் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால் படக்குழு இதுவரை இதை உறுதி செய்யவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகை தபுவும் இந்தப் படத்தில் நடிக்கிறார் எனத் தகவல் வெளியானது. இதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. இந்தச் சூழலில் தற்போது நம்பகமான சோர்ஸ் ஒன்று நடிகை மஞ்சு வாரியர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகச் சொல்கிறது.
* சில தினங்களுக்கு முன் வங்கி ஒன்றில் கொள்ளை நடக்கும் சீன் ஒன்று ஷூட் செய்யப்பட்டதாம். வங்கிக் கொள்ளையர்கள் சிலர் நகரின் முக்கியமான பகுதியிலுள்ள அந்த வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முற்பட, அங்கு என்ட்ரி கொடுக்கும் அஜித் அவர்களைத் துவம்சம் செய்கிற காட்சி படமாக்கப்பட்டதாம். அதற்குப் பிறகுதான் ஹைலைட். கொள்ளையர்களிடமிருந்து வங்கியை மீட்ட அஜித், ஊழியர்களுடன் சேர்த்து அந்த வங்கியையே ஹைஜேக் பண்ணுவாராம்.
என்ன மீம் கிரியேட்டர்ஸ்… `வணிக வளாகத்தை ஹைஜேக் பண்ணினா விஜய், வங்கியை ஹைஜேக் பண்ணினா அஜித்’ன்னு தெறிக்கவிட தயாராகிட்டீங்கதானே?