‘விஜய் 66’ படத்தில் நடிகர் ஷாம் இணைந்துள்ளார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் ‘விஜய் 66’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். தெலுங்கின் முன்னணி இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.
‘விஜய் 66’ படப்பிடிப்பு இம்மாதம் 8 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.குடும்பக் கதையாக உருவாகும் இப்படத்தில் நடிகர் ஷாம் இணைந்திருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், இன்று ஷாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘விஜய் 66’ படத்தில் நடிப்பதை ”தி ஒன் அண்ட் ஒன்லி தளபதியுடன் நடிக்க காத்திருக்கிறேன்” என்று போஸ்டருடன் வெளியிட்டு உறுதிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனாக நடித்து வந்த ஷாம், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்புத் தோற்றத்திலும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். ‘விஜய் 66’ படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே, விஜய்யின் ‘குஷி’ படத்தில் ஷாம் நடித்திருந்தார். ‘விஜய் 66’ படத்தினை பொங்கலையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.