நீதிமன்ற வழிகாட்டு முறைகளை கண்டுகொள்ளாமல் ஓமலூர் பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் முகம் சுளிக்கும் வகையில் ஆபாச நடனம் நிகழ்ச்சி நடத்துவது அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடந்து வருகிறது. இதில், அம்மன் திருவீதி உலா, பொங்கல் வைத்தல், நேர்த்திகடன் செலுத்துதல், பட்டிமன்றம், பாட்டு மன்றம், தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகளை விழாக்குழுவினர் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுபாடுகள் காரணமாக திருவிழா உட்பட எந்தவித நிகழ்சிகளும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், ஓமலூர், தாரமங்கலம், தொளசம்பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் நடந்தது குறித்து அப்பகுதியை சேர்ந்த பலரும் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஆபாச நடனம் குறித்து எந்தவித நடவடிக்கையோ விசாரணையோ போலீசார் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் கேட்கும்போது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கலைநிகழ்ச்சிகள் நடப்பதாகவும், உரிய பாதுகாப்பு வழங்கி கண்காணிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கருதினால் காவல் ஆய்வாளரே முடிவு செய்யலாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளாதால், காவல் நிலைய போலீசார் கலைநிகழ்ச்சிகளை நடத்த எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அனுமதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், அமரகுந்தி கிராமத்தில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் வந்து ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் என கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற ஆபாச கலைநிகழ்ச்சிகளால் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிகள் மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கிறது. மேலும், கோஷ்டி மோதல்கள் ஏற்படும் சூழலும், இளைஞர்கள் மோதிக்கொள்ளும் சூழலும் ஏற்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அதனால், ஆபாச நடன நிகழ்சிகளுக்கு நீதிமன்ற வழிகாட்டுதல் படி கட்டுபாடுகள் விதிக்க வேண்டும் என்றும் ஒரு மணி நேரம் மட்டும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM