சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ வேலு கலந்துக்கொண்டு, பயிற்சியை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விரைவில் தமிழகத்தில் விதிகளுக்கு புறம்பாக இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். மதுரவாயல் – துறைமுக திட்டத்தின் முதற்கட்ட பணிகள் 95% நிறைவடைந்துவிட்டது.
இதுதொடர்பாக முதல்வரை சந்தித்து ஒப்பந்தம் மேற்கொள்ள, ஒரிரு நாள்களில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்னை வரவுள்ளார். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படும். ஒரு சில வாரங்களில் இப்பணி தொடங்கும்” என தெரிவித்தார்.
முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய எ.வ.வேலு, கோவை, நாமக்கல் பகுதிகளில் புறவழிசாலை அமைக்கும் பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.