கீவ் : “ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில், ரஷ்யா தோல்வியடைந்து வருகிறது,” என, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த இரண்டு மாதங்களாக, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு, உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தப் போரில், இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கன், ராணுவ அமைச்சர் லாய்டு ஆஸ்டின் இருவரும், உக்ரைன் தலைநகர் கீவுக்கு நேற்று வந்தனர். அவர்கள், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினர். சந்திப்பின் போது, ரஷ்ய தாக்குதலால், உக்ரைனில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்தும், போரின் தற்போதைய நிலை குறித்தும், அமைச்சர்களிடம் ஜெலன்ஸ்கி விளக்கினார்.
இதையடுத்து, உக்ரைன் ராணுவத்திற்கு 2,300 கோடி ரூபாய் வழங்கவும்; 1,266 கோடி ரூபாய் மதிப்பிலான வெடிபொருட்களை விற்பனை செய்யவும், அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக, அமைச்சர்கள் தெரிவித்தனர்.இதுபற்றி, ஆன்டனி பிளின்கன் கூறியதாவது:உக்ரைனுக்கு, 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான இந்த போரில், ரஷ்யா தோல்வியடைந்து வருகிறது. உக்ரைன் வெற்றிப் பாதையில் நகர்ந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, மரியுபோலை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் ஈடுபட்டு வருகின்றன.
Advertisement