உத்தராகண்ட் மாநிலம் ரூக்கியில் நாளை நடைபெற உள்ள இந்துத்துவா நிகழ்ச்சியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் ஏதேனும் சம்பவங்கள் நடைபெற்றால் உத்தராகண்ட் மாநில தலைமைச் செயலாளர் நேரில் வந்து பதிலளிக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் தரம் சன்சத் என்ற இந்துத்துவா அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, `உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கி என்ற இடத்தில் இதே தரம் சனசத் என்ற அமைப்பு சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் இதில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்’ என மனுதாரர்கள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
அப்போது உத்தராகண்ட் அரசாங்கத்தை நோக்கி பல கடுமையான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், `இந்த நிகழ்ச்சியில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க என்னென்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது சம்பந்தமான விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவும்’ என மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர். மேலும் `இத்தகைய சூழ்நிலைகளில் எவ்வாறு விஷயங்களை கையாளவேண்டும் என்பது சம்பந்தமான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே இருக்கிறது. ஒருவேளை அவை சரியாக பின்பற்றப்பட வில்லை என்றால் நீங்கள்தான் அதற்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும்’ எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
சமீபத்திய செய்தி: மதுரை மேம்பால விபத்து: ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம்! முழு விவரம்
இது சம்பந்தமாக விசாரிக்கப்பட்டு இருப்பதாக மாநில அரசு சார்பில் தெரிவித்தபோது, அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் `விசாரிப்பது மட்டும் போதுமானது அல்ல. இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் உங்களது தலைமைச் செயலாளர் நேரில் வரவழைக்கப்பட்டு விளக்கமளிக்க வைக்க நேரிடும்’ என மீண்டும் எச்சரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து வழக்கின் விசாரணை மே 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கெனவே ஹரித்வார் உள்ளிட்ட இடங்களில் இந்த அமைப்பு நடத்திய நிகழ்ச்சிகளில் கடுமையான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மாநில அரசிடமிருந்து பிரமாணப் பத்திரங்களை கேட்டிருந்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM