டெல்லி: மத வெறுப்பு பேச்சுக்களை தடுக்க மாநில அரசுகள் என்ன நடவடிக்கைதான் எடுத்த்துள்ளது? வெறுப்பு பேச்சை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா இல்லையா என்று கேள்வி எழுப்பியதுடன், அதுகுறித்து மே 7ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மை காலமாக இந்து சாமியர்கள் நடத்தும் கூட்டங்களில், மதவெறுப்பு பேச்சுகள் பேசப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் உத்தராகண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் அதிக அளவில் மதவெறுப்பு பேச்சுகள் பேசப்படுகிறது. அண்மையில் உத்தராகண்ட் மாநிலத்தில் சாமியார்கள் நடத்திய கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகள் தூண்டப்பட்டதாக புகார் எழுந்தது.
இதை தடுக்கவும், மதவெறுப்பு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுக்கு உத்தரவிடகோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வீர்கர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ”இதுபோன்ற வெறுப்பு பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும் என்று கூறியதுடன், மாநில அரசுகள் இதை எவ்வாறு அனுமதிக்கின்றன என கேள்வி எழுப்பியதுடன், இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், அதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர், அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், இது தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வெறுப்பு பேச்சுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இமாச்சல பிரதேசத்தில் நடந்த சம்பவம் தொடர்பான மற்றொரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏன் அதுபோன்று பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், வெறுப்பு பேச்சை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து மே 7ஆம் தேதிக்குள் அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
நாளை உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் மீண்டும் சாமியார்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வீர்கர் தலைமையிலான அமர்வு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இனிமேல் இதுபோன்ற மாநாடுகளில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து முன்கூட்டியே உரிய அனுமதி வழங்கப்பட்ட பிறகுதான் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.