வேலூரில் மணல் கடத்தல் சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய ஆடியோவில் பேசிய தனிப்படை காவலரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் ஆயதப்படையில் பணியாற்றி வரும் டேனியல் என்பவர் அடுக்கம்பாறை பகுதியில் வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டுக்கு மணல் தேவைக்காக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையில் பணியாற்றி வந்த காவலர் பிரசாந்த் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அவரும், தனிப்படையில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் ஒருவர் மூலம் பஞ்சர் மணி என்பவரை தொடர்புகொண்டு டேனியல் வீட்டுக்கு மணல் கடத்திச்செல்ல பேசியுள்ளனர். மணல் வண்டி யாரிடமும் சிக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளனர்.
அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முறைகேடாக மணலை கடத்திச் சென்றபோது பாகாயம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தார். இதில், பாகாயம் காவல் நிலையத்தில் சிக்கிய வாகனத்தை மீட்டுக்கொடுக்குமாறு மணல் கடத்திய பஞ்சர் மணி என்பவர் தனிப்படை காவலர் பிரசாந்திடம் பேசும் 4 ஆடியோக்களை கடந்த மார்ச் மாதம் புதியதலைமுறை தொலைக்காட்சி பிரத்யேகமாக வெளியிட்டது.
இது தொடர்பாக எஸ்.பி விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் தனிப்படையில் இருந்து காவலர் பிரசாந்த் விடுவிக்கப்பட்டு ஆயுதப்படைக்கு அனுப்பப்பட்டார். இந்த ஆடியோ தொடர்பான விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியாக காவலர் பிரசாந்த்தை தற்போது தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM