புதுடெல்லி: கர்நாடகா ஹிஜாப் வழக்கு தொடர்பாக இன்னும் 2 நாட்கள் காத்திருக்கவும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ெதரிவித்தார். கர்நாடகா பள்ளிக் கல்லூரிகளில் குறிப்பிட்ட சமூகத்தினரின் மாணவிகள் ஹிஜாப் ஆடைகள் அணிவதற்கு தடை விதித்து அம்மாநில அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 15ம் தேதி அளித்த தீர்ப்பில், கர்நாடக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் கர்நாடக அரசின் அரசாணையை உறுதி செய்தது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜேஎம் காஜி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை கூறியது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உட்பட சில அமைப்புகள் சார்பில் மூன்று மேல்முறையீடுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, ‘கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை அவசரமாக பட்டியலிட வேண்டும்; ஏற்கனவே இந்த கோரிக்கையை கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது’ என்றார். அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘இல்லை… இல்லை… இன்று விசாரிக்க முடியாது. தயவு செய்து 2 நாட்கள் காத்திருக்கவும்’ என்று தலைமை நீதிபதி கூறினார்.