புதுடெல்லி: டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பின்னர், சோனியா காந்தி இல்லத்துக்கு வெளியில் கட்சி மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியதாவது:
வரும் 2024-ம் ஆண்டு நடைபெற மக்களவை தேர்தல் சவால்களை சமாளிப்பது உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு வருவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செயல்பாடுகள், தோல்விகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கடந்த 21-ம் தேதி 8 பேர் கொண்ட குழுவை சோனியா அமைத்திருந்தார். அந்தகுழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து ஆய்வுக் குழுவினரிடம் அறிக்கை குறித்து சோனியா ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் 2024 தேர்தலில் கட்சிக்குள்ள சவால்களை சமாளிப்பது, கட்சியை புதுப்பிப்பது போன்ற முக்கிய பணிகளுக்காக அதிகாரம் பொருந்திய செயல் குழுவை அமைக்க சோனியா காந்தி முடிவெடுத்துள்ளார்.
அத்துடன் மே 13 – 15 ஆகிய தேதிகளில் ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் ‘நவ்சங்கல்ப் சிந்தன் ஷிவிர்’ கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறினார்.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரை சேர்ப்பதற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர் வீரப்ப மொய்லி உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.