டெக்சாஸ்: ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2017-ல் ட்விட்டரின் விலையை ட்வீட் மூலம் கேட்டுள்ளார் மஸ்க். தற்போது அந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன மஸ்க், ட்விட்டர் தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக அது தொடர்பான பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்பும் ஈடுபட்டது. கடந்த மார்ச் மாதம் முதலே ட்விட்டர் குறித்து பேசி வந்தார் மஸ்க். முதலில் ஜனநாயக செயல்பாட்டுக்கு பேச்சு சுதந்திரம் தேவை என சொல்லியிருந்தார். அதோடு ட்விட்டர் இந்த விஷயத்தில் எப்படி என கேட்டிருந்தார் மஸ்க்.
தொடர்ந்து மஸ்க் சொந்தமாக சமூக வலைதளத்தை நிறுவ உள்ளாரா என கேட்டிருந்தனர் பயனர்கள். சிலர் பேசாமல் ட்விட்டரை வாங்கி விடுங்கள் என தெரிவித்தனர். தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக மஸ்க் தெரிவித்தார். அதையடுத்து ட்விட்டருக்கு இதுதான் எனது விலை என பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார் மஸ்க். இப்போது ட்விட்டர் தளம் அவரது வசமாகி உள்ளது.
இந்நிலையில், அவரது பழைய ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2017-ல் அந்த ட்வீட்டை பதிவு செய்துள்ளார் மஸ்க். ‘ஐ லவ் ட்விட்டர்’ என அதில் தெரிவித்துள்ளார் அவர். அதற்கு பயனர் ஒருவர், ‘அப்படியென்றால் நீங்கள் அதனை வாங்கி விடுங்கள்’ என ரிப்ளை கொடுத்துள்ளார். ‘அதன் விலை என்ன?’ என கேட்டுள்ளார் மஸ்க். இந்த ட்வீட் உரையாடல் தான் இப்போது வைரலாகி வருகிறது.